எனது அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களான அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலகம், அரசு சாரா நிறுவன செயலகம் ஆகியவற்றில்,
அலுவலக பணியாளர்களாகவும், வெளிக்கள பணியாளர்களாகவும் பணியாற்றும் அலுவலர்களின் ஒட்டுமொத்த தொகையில் தமிழ் மொழியறிவு கொண்டவர்களின் தொகை குறைவானதாகவும்,
அதிலும் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவும் இருக்கின்றன. இவை கடந்து வந்த ஆட்சியாளர்களின் வேதனைமிக்க சாதனைகள். இதை நிவர்த்தி செய்ய நான் உறுதி பூண்டுளேன்.
தமிழுக்கும், சிங்களத்துடன் இணையிடம் இல்லாவிட்டால், இந்த நாட்டில் தேசிய மொழிப்பிரச்சினையை தீர்க்க முடியாது.
தேசிய மொழிப் பிரச்சினையை தீர்க்காமல், அதேபோல் தமிழருக்கும் அரசு பணிகளில் உரிய இடம் வழங்காமல், தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது பற்றி கனவுக்கூட காண முடியாது.
எனவே மொழிப்பிரச்சினை, இனப்பிரச்சினை தொடர்புகளில் பங்களிப்பை வழங்கும் பொறுப்பு கொண்ட எனது அமைச்சில், விசேட காரணங்களை தவிர,
பொதுவாக இனி இரண்டு அரச மொழியறிவு கொண்டவர்களை மாத்திரம், அலுவலக மற்றும் வெளிக்கள பணியாளர்களாக உள்வாங்கும்படி பணித்துள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மொழியறிவுடன், சிங்கள, ஆங்கில அறிவு கொண்டவர்கள் பற்றிய தகவல் திரட்டு ஒன்றை ஏற்படுத்த நான் முடிவு செய்துள்ளேன்.
புதிய ஆண்டில் எனது அமைச்சு மூலமாக நடைமுறைபடுத்த நான் திட்டமிட்டுள்ள திட்டங்களில் இவர்களை உள்வாங்க விரும்புகிறேன்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழியறிவு கொண்டவர்களும், இரண்டு மொழியறிவு கொண்டு பணியில் ஈடுபட தயார் நிலையில் நாடு முழுக்க எத்தனை பேர் வாழ்கின்றார்கள் என்ற தகவல் திரட்டு, எமக்கு தேவைப்படுகிறது.
பல்கலைக்கழக ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு பல்கலைக்கழகத்தினதும் பட்டதாரி தகைமை, கபொத உயர்தர சித்தி, கபொத சாதாரண சித்தி ஆகிய தகைமைகள் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்ப தகவல்கள் வெவ்வேறாக கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரிகள் தமிழ், சிங்கள மொழி தகைமைகள் கொண்டிருக்க வேண்டும். ஆங்கில மொழியறிவும், தகவல் தொழிற்நுட்ப பயிற்சி மற்றும் அறிவும் மேலதிக தகைமைகளாக கொள்ளப்படும்.
அரச பணியில் ஈடுபடும் வயது கொண்டவர்களுடன், முதிர் வயதை அடைந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தகைமை கொண்டவர்களும் இந்த தகவல் திரட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
அனைவரும் தமது விண்ணப்பங்களை “அமைச்சர் மனோ கணேசன், தபால் பெட்டி 803,கொழும்பு” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
என தெரிவித்துள்ளார்.


0 Comments