Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பருவநிலை மாற்றத்தால் சென்னையில் பேய் மழை: - இயற்கை வழித்தடங்களை மறைத்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். விஞ்ஞானிகள் தகவல்

வரலாறு காணாத அளவுக்கு பெய்த பேய் மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்ததற்கு விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர்.
இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய டைரக்டர் சுனிதா நாராயணன் இதுபற்றி கூறியதாவது:–
பருவ நிலை மாற்றத்தால் சில இடங்களில் எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரிய அளவில் மழை பெய்ததற்கு இதுதான் காரணம். இந்திய துணை கண்டம் முழுவதுமே இது போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்திய நகரங்களில் இயற்கையான நீரமைப்புகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஸ்ரீநகர் போன்றவற்றில் இந்த விஷயங்களில் சரியாக கவனம் செலுத்தவில்லை. இதுபற்றி நாங்கள் ஏற்கனவே கூறி இருக்கிறோம்.
பொதுவாக ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரும், ஆற்று, ஓடை தண்ணீரும் இயற்கையாகவே வழித்தடங்களை அமைத்து இருக்கும். வெள்ளம் ஏற்படும்போது அந்த வழித்தடங்களில் தண்ணீர் சென்று கடலில் கலந்து விடும். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
ஆனால், சென்னை போன்ற நகரங்களில் இயற்கை வழித்தடங்களை மறைத்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். இதனால் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிவியல் சுற்றுச்சூழல் மைய துணை திட்ட மேலாளர் சுஷ்மிதா சென் குப்தா கூறும் போது, நகரங்கள் அமைந்துள்ள இடங்களில் முன்பு ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பதற்கு குளம், குட்டைகள் இருந்தன. அவற்றையும் அழித்து விட்டதால் நீர் தேங்குவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் நிலத்தடி நீர் வற்றி கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது.
இது போன்ற காரணங்களால் தான் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம். சென்னையில் தேங்கும் மழை நீர் சரியாக வடிந்து செல்வதற்கு உரிய வாய்க்கால் வசதிகள் செய்யப்படவில்லை.
இதுதான் வெள்ளத்துக்கு காரணமாக உள்ளது என்று கூறினார்.
அறிவியல் மையம் தகவல்படி சென்னையில் 1980 வாக்கில் 600 ஏரி, குளங்கள் இருந்தன. இப்போது அவற்றில் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சி இருக்கிறது. 1130 ஹெக்டேர் பரப்பளவில் 19 பெரிய ஏரிகள் இருந்தன. அவை தற்போது 649 ஹெக்டேராக சுருங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments