Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தீவானது சென்னை: சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு மக்கள் பரிதாபநிலை

கடந்த 100 ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள சென்னை மாநகரம் தற்போது தீவு போலக் காட்சி அளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பெரு மழை காரணமாக, சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கான சாலை, ரயில், விமானப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், சென்னை தாம்பரத்தில் மட்டும் 490 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
5 மாவட்டங்கள்: சென்னை மாநகர் மட்டுமல்லாது, அதன் புறநகர்ப் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய பக்கத்து மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். புதுச்சேரியிலும் கடந்த 24 மணி நேரத்தில் 220 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து, அந்த ஏரியிலிருந்து 25,000 கன அடி உபரி நீர் அடையாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாகவும், ஏற்கெனவே பெய்து வரும் பலத்த மழையாலும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை பாரிமுனையிலிருந்து தாம்பரம் செல்லும் பாதையில் உள்ள சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்துக்கு மேற்புறமும் அடையாறு பாலத்துக்கு மேற்புறமும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டு, பிற ஊர்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று 74 ரயில்கள் ரத்து: பலத்த மழை, தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு வியாழக்கிழமை (டிசம்பர் 3) செல்ல வேண்டிய 74 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
டிசம்பர் 6 வரை விமான சேவைகள் ரத்து: பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1) இரவு மூடப்பட்டது. தொடர்ந்து வரும் 6-ஆம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தம்: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, தரைவழித் தொலைபேசி, செல்லிடப்பேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை காலையில் மழை ஓரளவு தணிந்திருந்த போதிலும், மாலையிலிருந்து மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வட சென்னையில் சுமார் 50,000 மக்களும், தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சுமார் 5,000 பேரும் வெள்ளத்தில் சிக்கி, அங்கிருந்து வெளியேற முடியாமல் பரிதவிக்கின்றனர்.
மீட்புப் பணியில் முப்படைகள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் மாநில போலீஸார், தீயணைப்புப் படையினருடன் ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் வீரர்களும் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, மாம்பலம், வடபழனி, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர், ஆவடி, அம்பத்தூர், அமைந்தகரை, வளசரவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி மற்றும் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்டவை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் அவசர ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் கடந்த இரு வாரங்களாகத் தொடரும் மழை மேலும் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீடிக்கும் என்பதால், அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அமைச்சரவை சகாக்களுடன் நரேந்திர மோடி விவாதித்தார். அப்போது, மழை -வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கும் வாய்ப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள்: இன்று பார்வையிடுகிறார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் வியாழக்கிழமை பார்வையிடவுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments