Home » » வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: மேலும் 3 நாள் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: மேலும் 3 நாள் மழை நீடிக்கும்

தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமையன்று தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இது, திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது.
முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும்.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும்.
மேலும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
3 நாள்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் விட்டு விட்டு மழை இருக்கும். பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அடுத்து வரும் 3 அல்லது 4 நாள்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய கடலோரப் பகுதிகளில், வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். குறிப்பாக, ஆந்திர கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றார்.
“சராசரி அளவைவிட கூடுதல் மழை’
சராசரி அளவைவிட கூடுதலாகவே மழை பதிவானது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வட கிழக்குப் பருவ மழை காலத்தில், இதுவரை சென்னை மாவட்டத்தில் 1,170 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 790 மி.மீட்டர் ஆகும். அதே போல், தமிழகத்தில் சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக 70 மி.மீ. கிடைத்துள்ளது. அதாவது, 510 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழையளவு 440 மி.மீ.
மழை நிலவரம்: திங்கள்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 120 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 100 மி.மீ., வானூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஆகிய இடங்களில் தலா 90 மி.மீ. மழை பதிவாகியது. மேலும், தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி, திருவாரூர், அரியலூர் மாவட்டம் திருமானூர், தஞ்சை மாவட்டம் பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் தலா 80 மி.மீ. மழை பதிவானது என்றார் ரமணன்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |