ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தன்னுடன் விகாரைகளுக்கு வருவதைக் கூட கட்சியின் தலைவர் தடை செய்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ அங்கலாய்த்துள்ளார்.
பலாங்கொடை விகாரையொன்றில் நேற்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட மஹிந்த, கட்சியின் தலைமைப்பீடம் தன்னை ஒதுக்குவதற்காக தனக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவதாக ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் வரை அதிகாரத்தில்இருந்த போது கண்மண் தெரியாமல் தான் ஆட்டம் போட்டது மஹிந்தவுக்கு தற்போது மறந்துவிட்டது என்றே தோன்றுகின்றது.
ஆளுங்கட்சி அமைச்சர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரினதும் ஊழல், மோசடிகள் தொடர்பான கோப்புகள் தன்னிடம் இருப்பதாக அச்சுறுத்தி பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கவிடாமல் அனைவரையும் தடுத்து வைத்திருந்தார்.
அத்துடன் தனது ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி பிரதேசசபை உறுப்பினர்களுக்கு கூட ஆளுங்கட்சியினரின் வைபவங்களில் அழைப்பு விடுக்கப்படுவதை மறைமுகமாக தடை செய்திருந்த வரலாறு எல்லாம் மஹிந்தவுக்கு வசதியாக மறந்து போயிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று விமர்சித்துள்ளது.


0 Comments