மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கிராமம் வெள்ளத்தால் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாலமுனை - கர்பலாச்சந்தி தோணா பிரதேசத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து வருவதால் தற்போதைய மழை காலத்தில் பாலமுனை கிராமம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 1500 குடும்பங்கள் வாழும் இக்கிராமம் தோன்றிய காலத்திலிருந்து குறித்த தோணாவினூடாகவே வெள்ளநீர் கடலுக்குச் செல்கிறது. இவ்வாறு இந்த வடிச்சல் பிரதேசம் திட்டமிட்டு அடைக்கப்படுவதால் அனைத்து வெள்ளநீரும் அவ்விடத்திலேயே தேங்கி நிற்கிறது. இதனால் ஊருக்குள் நீர் செல்வதால் ஊரே நீரினால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனிநபரினால் அடைக்கப்பட்ட இடத்தை அகற்றி மீண்டும் நீரை முழுமையாக வெளியேறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆரையம்பதி பிரதேச சபைக்கு மக்கள் கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று காலை குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்த பிரதேச சபை செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம் இது தொடர்பாக பொலிசாருக்கும் பிரதேச செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.








0 Comments