ஒரு இனத்தை அழிப்பதற்கும் நசுக்குவதற்காகவும் காலத்துக்கு காலம் உருவாக்கப்படுகின்ற சிங்கள பௌத்த பேரினவாதங்கள் இந்த நாட்டில் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு கலைஞர்களினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வேல்ஸ் சினிமா பட்டறையின் ஏற்பாட்டில் பாலுமகேந்திரா திரைப்பட விழா நேற்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பிரதேசம். அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடிக்கப்பட்ட,தாக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதிகளே வடகிழக்கு தமிழர்கள்.
இந்த இனத்தின் பிரதிநிதிகளாகவே நாங்கள் இருக்கின்றோம். கடந்த மூன்று தசாப்தமாக இந்த மண்ணில் நடந்த கொடிய யுத்ததினால் நாங்கள் பலவற்றை இழந்துள்ளோம்.
கல்வியை, பொருளாதாரத்தினை நல்ல காத்திரமான அரசியலை இழந்துள்ளோம், கலையை இழந்துள்ளோம் கலாசாரத்தினை இழந்துள்ளோம்.
பலர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேட்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி இல்லாவிட்டால் இன்று வடகிழக்கில் தமிழர்கள் இல்லாத நிலையேற்பட்டிருப்பதுடன், ஒரு இனம் வாழ்ந்த அடையாளமே இல்லாமல்போன நிலையே ஏற்பட்டிருக்கும்.
தமிழர்களின் குரலாக, மூச்சாக மக்களின் அங்கீகாரம் பெற்று தொடர்ந்து செயற்படும் ஒரு கட்சியென்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.
எந்த அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போகாத ஒரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத்தினையும் தாண்டி சர்வதேசம் வரையில் தமது பணியை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்களின் கலையை, பண்பாட்டை இனத்தை, மொழியை திட்டமிட்டு அழிக்கும் இந்த நாட்டின் சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புகள் இன்னும் இந்த நாட்டில் இருக்கவே செய்கின்றன.
கடந்த மகிந்த ராஜபக்ஸ காலத்தில் பொதுபலசேனா என்ற அமைப்பு இருந்தது. பொதுபலசேனா என்ற பாம்பு இந்த நாட்டில் படம் எடுத்தபோது அன்று காட்டாட்சி நடாத்திய மகிந்த அரசு அதற்கு பாலும் முட்டையும் கொடுத்தது.
பல சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் நசுக்கப்பட்டார்கள். பாரம்பரிய புராதன இடங்கள் அழிக்கப்பட்டது. இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டன.
அதன் காரணமாக இந்த நாட்டில் காட்டாட்சி புரிந்து இந்த நாட்டில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொத்துக்குண்டுகள் போட்டு கொன்றொழித்த ஆட்சியை இந்த ஆண்டு சிறுபான்மை மக்கள் ஒன்றிணைத்து மாற்றினார்கள்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தினார்கள். இன்று இந்த நல்லாட்சியில் இரண்டாவது பாம்பு தலையெடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இந்த நாட்டில் இரண்டாவது பாம்பு தலையெடுத்து தாண்டவம் ஆடியுள்ளது. இராவணபலய என்ற அமைப்பு சொல்கின்றது யாழில் உள்ள நயினா தீவின் பெயரை மாற்றி நாகதீப என்று பெயரை வைக்கவேண்டும் என்று.
இந்த இராவணபலய என்கின்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பு நயினா தீவின் பெயரை மாற்றி நாகதீப என்று மாற்றப்பட வேண்டும் இல்லாவிட்டால் தமிழர்களின் கிராமங்களை மாற்றுவோம் என கூறியிருக்கின்றார்கள்.
சிறுபான்மை மக்களின் பலத்தினால் வந்த இந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னைய காட்டாட்சி அரசாங்கத்தினைப்போல் இரண்டாவது பாம்பாக வந்துள்ள இராவணபலய போன்ற பாம்புகளுக்கு முட்டையும் பாலையும் வழங்கி ஆதரவளித்தால் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்காது எனபதை தெரிவிக்கின்றேன்.
தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள், கலை, கலாசார, மொழி இந்த நாட்டில் பேணப்பட வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிங்கள மக்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக தமிழ் மக்களும் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
காலத்துக்கு காலம் படம் எடுத்து ஆடும் பொதுபலசேனா மற்றும் இராவணபலய போன்ற அமைப்புகள் இந்த நாட்டில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்பதில் இந்த இராவணபலய அமைப்பு தீவிரமாகவுள்ளது.
217 தமிழ் அரசியல் கைதிகள் எமது நாட்டின் சிறைகளில் உள்ளனர்.அவர்களை வெளியில் விட்டால் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கும் என்று கூறுகின்றனர்.
11900 தமிழ் போராளிகள் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த நாட்டில் பயங்கரவாதத்தினை தோற்றுவிக்கவில்லை.
எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. அவ்வாறான நிலையில் 217 பேர் விடுதலையாகி எந்த பயங்கதவராத்தினையும் தோற்றுவிக்கமாட்டார்கள்.
ஒரு இனத்தின் அழிப்புக்கும், ஒரு இனத்தினை நசுக்குவதற்காகவும் காலத்துக்கு காலம் உருவாக்கப்படுகின்ற சிங்கள பௌத்த பேரினவாதங்கள் இந்த நாட்டில் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் சரியான முறையில் கையாள வேண்டும் என்றார்.


0 Comments