முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று மூன்று மணி நேரம் விஷேட விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையில் இருந்தோரை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் இது தொடர்பில் ஜீ.எல்.பீரிஸிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பொலிஸார் பதிவு செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று பிற்பகல் கொள்ளுபிட்டியில் உள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
அதன்படி நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் ஜீ.எல்.பீரிஸ் அங்கு ஆஜரானார். இதனையடுத்து அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலும் சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.


0 Comments