திகாமடுள்ள மாவட்டத்தில் 07 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்று நடை பெறும் பாராளுமன்ற தேர்தலில் திகாமடுள்ள மாவட்டத்தில் 07 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. வேட்பாளர்கள் பலரும் காலை வேளை வாக்களிக்க சென்றனர் குறிப்பாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கூடுதல் அவதானம் காட்டுவதைக் காண முடிகிறது.
மக்கள் பிரதிநிதிகள் 07 பேரை தெரிவு செய்வதற்கு திகாமடுள்ள மாவட்டத்தில் 14 அரசியல் கட்சி சார்பாக 140 வேட்பாளர்களும், 17 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 170 வேட்பாளர்களுமாக 310 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
திகாமடுள்ள மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்கவென 464 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை தொகுதியில் 160 வாக்களிப்பு நிலையங்களும் சம்மாந்துறைத் தொகுதியில் 87 வாக்களிப்பு நிலையங்களும் கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 151 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டு வாக்களிப்பு இடம் பெறுவதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரட்ண தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களும் அதனை சூழவூள்ள பிரதேசங்களும் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டு பொலிஸார் நிறுத்தப் பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளுக்கான தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப் பட்டிருக்கும் பெப்ரல் அமைப்பின் கண்காணிப்பு தலைமை அதிகாரி கே.சத்தியநாதன் தலைமையில் தங்களின் பணிகளை ஆரம்பித்தனர் Kalmunai/Ish
0 Comments