Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 5-ந்தேதி முதல் அமுல்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி மாற்றங்கள் ‘‘இனி பேட்டிங் பவர்-பிளே கிடையாது’’

பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஐ.சி.சி. பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி இனி பேட்டிங் பவர்-பிளே கிடையாது.


ரன்மழை போட்டி



சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு நாள் போட்டிக்கு உள்ள வரவேற்பே தனி. ஆனால் முன்பு போல் இல்லாமல் ஒருநாள் போட்டிகள், பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக மாறி விட்டது. ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்த தனிநபர் இரட்டை சதத்தை, அடிக்கடி பார்க்க முடிகிறது. அது மட்டுமின்றி அணிகளும் 400 ரன்களை சர்வசாதாரணமாக குவிக்கின்றன.



சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்திய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 28 முறை 300 ரன்களுக்கு மேல் திரட்டப்பட்டன. இதில் மூன்று முறை 400 ரன்களை கடந்ததும் அடங்கும். தவிர, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ்கெய்ல், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் இரட்டை செஞ்சுரி விளாசி சாதனை படைத்தனர்.



டோனியின் கோரிக்கை



ஒரு நாள் போட்டி விதிகள் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பவுலர்களும் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு வீரர்கள் வலியுறுத்தினர். இந்திய கேப்டன் டோனியும் அண்மையில் மாற்றம் தேவை என்று குரல் எழுப்பினார். குறிப்பாக ‘பவர்-பிளே’ இல்லாத நேரத்தில் 30 யார்டுக்கு வெளியே நிறுத்தப்படும் பீல்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் மூலம் இறுதிகட்டத்தில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடுவதாக புகார் கூறினார்.



இதையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தலைமையிலான ஐ.சி.சி.யின் கிரிக்கெட் கமிட்டி, ஒரு நாள் போட்டியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதித்து, பவுலர்களும் பலன் அடையும் வகையில் சில பரிந்துரைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அனுப்பியது.



இந்த நிலையில் ஐ.சி.சி.யின் வருடாந்திர கூட்டம் வெஸ்ட் இண்டீசின் பார்படோசில் 5 நாட்கள் நடந்தது. இதில் கும்பிளே தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியின் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.



பேட்டிங் பவர்-பிளே கிடையாது



இதன்படி ஒரு நாள் போட்டிகளில் சில அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-



* ஒரு நாள் போட்டியில் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க கொண்டு வரப்பட்டது தான் ‘பவர்-பிளே’. ‘பவர்-பிளே’யின் போது பெரும்பாலான பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் நிறுத்தப்படுவதால் பேட்ஸ்மேன்களால் சிக்சர், பவுண்டரிகள் சுலபமாக நொறுக்க முடியும். இதனால் பந்து வீச்சாளர்களுக்கே சுமை அதிகம். இதனை கருத்தில் கொண்டு ‘பவர்-பிளே’யின் எண்ணிக்கை 15 ஓவர்களில் இருந்து 10 ஓவர்களாக குறைக்கப்படுகிறது. அதாவது முதல் 10 ஓவர் கட்டாய பவர்-பிளே வழக்கம் போல் உண்டு. அதன் பிறகு 15-வது ஓவரில் இருந்து 40-வது ஓவருக்குள் 5 ஓவர் ‘பேட்டிங்-பவர்பிளே’ கொண்டு வரப்படும். பொதுவாக 36-வது முதல் 40-வது ஓவருக்குள் தான் பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு விருப்பமான இந்த பவர்-பிளேயை தேர்வு செய்வார்கள். இனி பேட்டிங் பவர்-பிளே’கிடையாது.



* கட்டாய ‘பவர்-பிளே’ அமலில் இருக்கும் முதல் 10 ஓவர்களின் போது, களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனில் இருந்து 14 மீட்டர் தூரத்திற்குள் (கேட்ச் செய்யும் பகுதி) 2 பீல்டர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது முந்தைய விதியாகும். ஸ்லிப், லெக்-ஸ்லிப், கல்லி போன்ற திசைகளில் இந்த 2 பீல்டர்களும் நிறுத்தப்படுவது உண்டு. இனி பேட்ஸ்மேன்களுக்கு அருகில் ‘கேட்ச்’ பகுதியில் இரண்டு பீல்டர்களை நிறுத்த வேண்டிய தேவையில்லை.



‘பிரீட்’ விரிவாக்கம்



* ஒரு நாள் போட்டியில் பவுலர் பந்து வீசும் போது கிரீஸ் கோட்டை தாண்டி வீசினால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு ‘பிரீட்’ வழங்கப்படும். அதாவது அதற்கு அடுத்த பந்தை பவுலர் வீசும் போது, அந்த பந்தில் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அவுட்டும் (ரன்-அவுட் தவிர) வழங்கப்படமாட்டாது. இனி எல்லா வகையான ‘நோ-பால்’களுக்கும் ‘பிரீட்’ வழங்கப்படும். இது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் பொருந்தும்.



* 41 முதல் 50 ஓவர்கள் வரை, 30 யார்டு தூரத்திற்கு (90 அடி) வெளியே முன்பு அதிகபட்சமாக 4 பீல்டர்களுக்கு மேல் நிறுத்தக்கூடாது என்று விதிமுறை இருந்தது. இதிலும் மாற்றம் செய்யப்படுகிறது. இனி இந்த சமயத்தில் அதிகபட்சமாக 5 பீல்டர்களை நிறுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கடைசி கட்ட ரன் வேட்டையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.



திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி தொடங்கும் வங்காளதேசம்-தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் தொடரில் இருந்து புதிய விதிகளை பார்க்கலாம். அதே தேதியில் இந்திய அணியின் ஜிம்பாப்வே தொடர் திட்டமிட்டப்படி தொடங்க இருப்பதால் அந்த தொடரும் புதிய விதிக்குட்பட்டே நடக்கும்.



மாற்றம் ஏன்?



பின்னர் ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் அளித்த பேட்டியில், ‘வெற்றிகரமாக நிறைவடைந்த 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஒரு நாள் போட்டி விதிமுறைகளை நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம். மிகவும் புகழ்பெற்ற இந்த வடிவிலான போட்டிக்கு பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டமுறை எளிமையானதாகவும், மக்களால் எளிதாக புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் இருக்க வேண்டும்; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் இரண்டு தரப்பினருக்குமே சரிசம வாய்ப்பு அமைய வேண்டும் என்று விரும்பினோம். அதன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் ஒரு நாள் போட்டியில் ஆக்ரோஷம், அதிரடி, ‘திரிலிங்’ ஆகியவை மீண்டும் தொடரும் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளோம்.’ என்றார்.



அமெரிக்கா நீக்கம்



ஐ.சி.சி. அமைப்பில் இருந்து உறுப்பு நாடான அமெரிக்க கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடு கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க கிரிக்கெட் சங்கம் இடை நீக்கம் செய்யப்படுவது இது 3-வது முறையாகும்.

Post a Comment

0 Comments