கட்டாரில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை அணிக்கு பதக்கங்களைப் பெற்றுத்தந்த வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பும் பணப்பரிசு வழங் கும் நிகழ்வும் விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்றன.
இதன்போது கட்டார் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற யமானிக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் ரூ.3 இலட்சம் பணப்பரிசும் பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தினால் ரூ.2 இலட்சமும் அத்தோடு யமானியின் பயிற்சியாளரான பண்டாரவுக்கு 75000 ரூபா பணப்பரிசும் விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இலங்கையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்கள் சாதனை படைப்பதற்கும் தன்னாலான அனைத்து செயற்பாடுகளையும் எவ்வித தயக்கமுமின்றி முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
நாட்டில் பல சிறந்த வீர வீராங்கனைகள் இருக்கிறார்கள். இவர்களை இனங்காணுவதுதான் எமது முக்கிய திட்டமாக இருக்கின்றது. அவ்வாறு இனங்காணப்பட்ட பின் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்துகொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கத்தாரில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது என்ற செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதேநேரம் விளையாட்டுத்துறை அமைச்சராக பெருமையும் கொள்கிறேன்.
இது ஆரம்பம் மட்டுமேஇ இன்னும் இன்னும் நாம் சாதிக்க நிறைய இருக்கின்றது. அதைநோக்கித்தான் தற்போதைய எமது பயணத்திட்டம் அமைந்துள்ளது.
எதற்கும் அச்சம் கொள்ளவேண்டாம் என்று வீர வீராங்கனைகளை அறிவுறுத்திய அமைச்சர் நவீன் திஸாநாயக்க எந்தவிதமான சவால்கள் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் தன்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்த மூன்று வீரர்களுக்கும் பணப்பரிசு அமைச்சர்களினால் வழங்கப்பட்டது.
ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கத்தை வென்றெடுத்த ரொஷான் தம்மிக்க ரணதுங்க கொடக்கா, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் வெள்ளிப்பதக்கம் வென்றெடுத்த சமல் குமாரசிறிக்கும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 52.88 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப்பதக்கம் வென்றெடுத்த எம். எஸ். ராஜபக் ஷவுக்கும் தலா ரூ.2 இலட்சம் வீதம் வழங்கப்பட்டது. அத்தோடு இவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் பணப்பரிசு வழங்கப்பட்டது.
42 நாடுகளைச் செர்ந்த 750 இற்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் கலந்துகொண்ட இப் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அத்துடன் 27 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments