கழிவுகளை பயன்படுத்தி பசளை உற்பத்தி செய்யும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் களுவாஞ்சிக்குடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யோகேஸ்வரி வசந்தகுமாரி தலைமையில் இடம்பெற்றது.
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து வருகின்ற கழிவுகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி அதனை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்காகவும் மற்றும் கழிவுகளை கொட்டுவதில் இடப்பிரச்சினைக்கு நெடுங்காலமாக முகங்கொடுத்து வந்தமையை கருத்தில் கொண்டும் பிரதேச சபையின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை செயலாளர் திருமதி யோகேஸ்வரி வசந்தகுமார் தெரிவித்தார்.களுவாஞ்சிக்குடி கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தினை அமைப்பதற்கான நிதியினை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி இருந்ததுடன் இதற்கான வேலைத்திட்டத்தினை யுனொப்ஸ் நிறுவனமே முன்னெடுத்து இருந்தது.
இந்நிலையத்தினை பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் யுனொப்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் கிமேனிதா சிலிகாடோ, பிராந்திய முகாமையாளர் ஜெமிறோயோ ஒலிற், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் ஜி. சுகுணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.


0 Comments