Home » » உதவி வழங்கியமை குறித்து நேபாள ஜனாதிபதி, பிரதமர் இலங்கைக்கு நன்றி தெரிவிப்பு

உதவி வழங்கியமை குறித்து நேபாள ஜனாதிபதி, பிரதமர் இலங்கைக்கு நன்றி தெரிவிப்பு

உண்மையான நெருங்கிய நண்பராக இலங்கை நேபாளத்துக்கு வழங்கிய உதவிகளுக்கு நேபாள ஜனாதிபதியும் பிரதமரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அனர்த்தத்தின் போது உண்மையான நெருங்கிய நண்பராக இலங்கை அரசாங்கம் நேபாளத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு நேபாள ஜனாதிபதி மற்றும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளனர்.
நேபாள மக்கள் எதிர்கொண்ட பேரழிவினை கேள்வியுற்றவுடன் அம்மக்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்க முடியுமான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தனர்.
அத்துடன் நேபாள ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தமக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் இவ்வுதவிகள் எமக்கு பாரிய பலத்தை வழங்கியதாகவும் நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதேவ் தெரிவித்துள்ளார்.
பாதிப்புக்குள்ளான நேபாள மக்களுக்காக இலங்கை நிவாரண சேவைப் பணிப்பாளர்கள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நேற்று முன்தினம் நேபாளுக்கு விஜயம் செய்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி உள்ளிட்ட இலங்கை பிரதிநிதி குழுவை சந்தித்த வேளையிலேயே நேபாள ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தூதுக்குழுவினரை சந்தித்து மேலும் கருத்துத் தெரிவித்த நேபாள ஜனாதிபதி இலங்கையில் இருந்து வருகை தந்த நிவாரண சேவை ஊழியர்கள் மிக கஷ்டமான நிலையினை எதிர்கொண்டுள்ள டலல்காட் நகரை அண்மித்த பிரதேசங்களிலேயே சேவையாற்றுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்குள் இந்நகரில் பல தடவைகளில் பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இவ்வாறான ஆபத்தான நிலைமையிலும் இலங்கை நிவாரண ஊழியர்கள் வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்பை பாராட்டுவதாகவும் நேபாள ஜனாதிபதி கூறினார்.
கத்மண்டு நகரில் தங்கியிருந்த குறுகிய காலத்திற்குள் நேபாள பிரதமர் சுசில் கொய்ராலாவை சந்தித்த இலங்கை தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் சகோதரத்துவ செய்தியினை நேபாள பிரதமருக்கு அறிவித்தனர்.
இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் நேபாளுக்கு வருகை தந்து தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்தமையும் உதவிகளை வழங்கியமையும் இரு நாடுகளினதும் உறவினை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக இங்கு நேபாள பிரதமர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் தமது நாட்டுக்காக வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த நேபாள பிரதமர் சுனாமி, வெள்ளப் பெருக்கு போன்ற அனர்த்தங்களை எதிர்கொண்ட இலங்கை அச்சந்தர்ப்பத்தில் பெற்ற அனுபவங்களை பயன்படுத்தி தமது நாட்டுக்கு உதவிகளை வழங்க துரித கதியில் முன் வந்தமை மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்றும் தெரிவித்தார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |