ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்பார்த்த அளவிற்கு 19வது திருத்தத்தை நிறைவேற்ற முடியாத போதும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் 60 முதல் 65 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதியின் அரசியலமைப்பு விவகார ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி ஐயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு பெரும் தேவையிருந்தது. ஒருபோதும் அவர் அதிகாரங்களை குறைப்பதை மட்டுப்படுத்த முயலவில்லை. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலமில்லாததால் எதிர்த்தரப்பின் சில திருத்தங்களுக்கு இணங்க நேரிட்டது.
நாட்டின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவை மற்றும் முப்படை தலைவராகவும் தொடர்ந்து ஜனாதிபதியிருப்பார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்பு கூற வேண்டும். ஜனாதிபதியே பிரதமரை நியமிக்கவுள்ள போதும் அவரால் பிரதமரை பதவி விலக்க முடியாது.
பிரதமரை விலக்கும் எந்தப் பிரிவும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என்ற எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டு தவறானது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டாலோ, வரவு செலவுத் திட்டமோ கொள்கை பிரகடனமோ தோற்றாலோ பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் விலக நேரிடும்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படாது.
பிரதமரின் ஆலோசனையுடனேயே ஜனாதிபதியால் அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. இது தொடர்பான திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றம் எதுவும் மேற்கொள்ளவில்லை.
சுயாதீன ஆணைக்குழுக்கள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேள்வி மனு தொடர்பிலும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் பாரிய திட்டங்கள் கூட கேள்வி மனுவின்றியே வழங்கப்பட்டன.
19வது திருத்தத்தின் கீழ் நியமிக்கும் அரசியலமைப்பு சபைக்கு 3 எம்.பி.களையும் 7 சுயாதீன நபர்களையும் நியமிக்க நாம் திருத்தம் மேற்கொண்டிருந்தோம். ஆனால் எதிர்த்தரப்பின் எதிர்ப்பினால் இதனை 7 எம்.பி.க்கள், 3 சுயேச்சை உறுப்பினர்கள் என மாற்ற நேரிட்டது.
இதன்படி பதவி வழியாக பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதோடு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து 2 எம்.பிகளையும் 3 சுயாதீன நபர்களையும் நியமிக்கவுள்ளனர்.
ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஒரு எம்.பி. நியமிக்கப்பட உள்ளதோடு சிறுபான்மை கட்சிகள் சார்பில் எம்.பி. ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
0 Comments