நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 175 தனிநபர்களுக்கு நேற்று வியாழக்கிழமை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கிறிஸ்தவ விவகார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நடைபெற்றது.
வெளிநாடுகளில் பிரஜாவுரிமையை பெற்றதன் காரணமாக இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்தவர்கள் மற்றும் பிறநாட்டில் பிறந்து இலங்கைப் பிரஜாவுரிமையை பெறவிரும்பியவர்கள் என்ற இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் நேற்று இலங்கை பிரஜையாக இந்நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்கியதன் பின்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து இலங்கைப் பிரஜைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டவர்கள் மத்தியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இரண்டைப் பிரஜாவுரிமை வழங்குவதனை மீள ஆரம்பித்திருப்பதுடன் அதற்கான செயற்பாடுகளையும் சரளமாக்கியிருப்பதனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தமது திறமையையும் அனுபவத்தையும் தாய் நாட்டிற்கு பயனுடையதாக்கும் வகையில் இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், இதற்காக விண்ணப்பிப்போர் குறித்த தகவல்கள் இரு நாட்டு பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கை அடிப்படையிலும் நுணுக்கமாக ஆராய்ந்ததன் பின்னரே இரட்டைப் பிரஜாவுரிமைக்காக அங்கீகரிக்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வாக்குறுதியளித்ததன்படி, நாம் முதற்கட்டமாக 175 பேருக்கு இன்று இரட்டை பிரஜாவுரிமை வழங்கியுள்ளோம்.
விண்ணப்பித்துள்ள ஏனையோர் தொடர்பிலும் நாம் விரைவில் ஆராய்வோம். இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு வாராந்தம் கூடி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
வரவு - செலவு திட்டத்தில் 5 லட்சமாக சிபாரிசு செய்யப்பட்ட கட்டணத் தொகை பொதுமக்களின் வசதி கருதி இரண்டரை லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
கட்டுப்பாட்டு நாயகம் எம். என் ரணசிங்க கருத்து கூறுகையில்,
55 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கையில், 25 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்போர், ஆகக் குறைந்தது ஒரு வருடகால டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு படித்துள்ளோர் வங்கிகளில் 25 லட்சத்துக்கும் அதிகமான நிலையான வைப்புக்களை வைத்திருப்போர் இவர்களது மனைவி அல்லது கணவன் அல்லது மற்றும் 22 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுமெனத் தெரிவித்தார்.
0 Comments