மத்தள சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க முன்னைய அரசாங்கம் எடுத்த கடன்தொகை மாதாந்தம் 250 மில்லியன் ரூபாவை செலுத்த நேரிட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை நடத்திச் செல்வது சவாலாக உள்ளது. இது முறையான ஒரு பொறிமுறையின் கீழ் இலாபகரமானதாக மாற்றப்படும் என சிவில் விமானசேவை அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தை நிர்மாணிக்க எடுக்கப்பட்ட கடனைச் செலுத்தவும் விமான நிலைய ஊழியர்களுக்குச் சம்பளம் செலுத்தவும் விமான நிலையத்தின் வருமானத்தால் முடியாமற் போய் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று இங்கு ஒரு விமானமே வருகிறது. அது ‘பிளைடுபாய்’ நிறுவனத்துக்கு உரிய வெளிநாட்டு விமானமாகும்.
மத்தள விமான நிலையத்தை பராமரிப்பு, திருத்த வேலை நிலையமாக உலகுக்கு அடையாளப்படுத்தவும் இப்பகுதியின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்துவது தொடர்பாகவும் அவதானம் திரும்பி உள்ளதாகவும் அதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்தள விமான நிலையத்தில் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். ஆனால் வேலை இல்லை. கட்டுநாயக்காவில் வேலை இருந்தாலும் ஊழியர்கள் இல்லை.
இந்த நிலைமையைக் கண்டறிந்து இவ்விரு விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தொடர்ந்து தெரிவித்தார்.


0 Comments