Home » » அமெரிக்கக் கப்பலை சிறைப்பிடித்த ஈரான் போர்க்கப்பலை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்கக் கப்பலை சிறைப்பிடித்த ஈரான் போர்க்கப்பலை அனுப்பிய அமெரிக்கா

வாஷிங்டன்: பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றை ஈரான் வழி மறித்து சிறை பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க கடற்படை தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்ஷல் தீவைச் சேர்ந்த அந்த அமெரிக்கக் கப்பல், தனது கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்ததால் சிறை பிடித்ததாக ஈரான் கூறியுள்ளது.
மார்ஷல் தீவைச் சேர்ந்த அந்த அமெரிக்கக் கப்பல், தனது கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்ததால் சிறை பிடித்ததாக ஈரான் கூறியுள்ளது.
மாயர்ஸ்க் டைகிரிஸ் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பலில் 24 பேர் உள்ளனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவர்கள் என்ற ரோந்துப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது. படகுகள் மூலம் வந்த ஈரான் படையினர் அந்தக் கப்பலை செவ்வாய்க்கிழமை காலையில் சிறை பிடித்தனர். அமெரிக்கக் கப்பலின் கேப்டன் சரணடைய முதலில் மறுத்துள்ளார். இதையடுத்து அவர்களை எச்சரிப்பதற்காக துப்பாக்கியால் சுட்டனர் ஈரான் படையினர் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், சர்வதேச அங்கீகாரம் உள்ள கடல் மார்க்கத்தில்தான் அமெரிக்க கப்பல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதை ஈரான் படையினர் துப்பாக்கி முனையில் தங்களது பகுதிக்குள் திருப்பிச் சென்றுள்ளனர். ஈரான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து உதவி அமெரிக்க கப்பலின் கேப்டன் அமெரிக்கக் கடற்படைக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து போர்க்கப்பல் பெர்சிய வளைகுடாவுக்கு விரைந்துள்ளது என்றனர். ஈரான், அமெரிக்கா இடையே ஏற்கனவே உறவு சரியில்லை. சமீப நாட்களாகத்தான் அதில் ஓரளவு சுமூக நிலை திரும்புவது போல இருந்து வருகிறது. அணு ஆயுத அழிப்பு உள்ளிட்டவை குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் தற்போது அமெரிக்கக் கப்பலை ஈரான் படையினர் மடக்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த அமெரிக்கா விரும்பவில்லை என்று தெரிகிறது. மார்ஷல் தீவானது, அமெரிக்காவிடமிருந்து 1986ம் ஆண்டே சுதந்திரம் பெற்று விட்டது. இருப்பினும் அமெரிக்காவை சார்ந்தே அந்தத் தீவு தொடர்ந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஸ்டீவ் வாரன் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், சர்வதேச கப்பல்கள் செல்லும் பாதையில்தான் மார்ஷல் தீவு கப்பலும் சென்று கொண்டிருந்தது.
ஆனால் அதை ஈரானியர்கள் பிடித்துள்ள விதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும் எச்சரிக்கும் வகையிலும் ஈரானிய படையினர் சுட்டுள்ளனர். இதுவும் தவறானதாகும். இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம், விசாரித்து வருகிறோம் என்றார். இந்தக் கப்பலை ரிக்மெர்ஸ் ஷிப்மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அதில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கிழக்கு ஐரோப்பியர்கள் மற்றும் ஆசியர்கள் என்று கூறப்படுகிறது. துபாய் அருகே உள்ள துறைமுகம் ஒன்றை நோக்கி அது சென்று கொண்டிருந்தது. ஜெட்டாவிலிருந்து அந்தக் கப்பல் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் உணவுப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட சாதாரண சரக்குகளே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |