Home » » மயூரா துரதிருஸ்டவசமாக இவ்வுலகு இன்னும் நரகமாகவே இருக்கிறது! சென்றுவா உன் ஓவியங்கள் காவியமாகட்டும்:

மயூரா துரதிருஸ்டவசமாக இவ்வுலகு இன்னும் நரகமாகவே இருக்கிறது! சென்றுவா உன் ஓவியங்கள் காவியமாகட்டும்:

உயிர் பிச்சைக் கேட்ட குடும்பத்துக்கு பரிசாக சோடித்தப் பேழையில் பிணத்தை கொடுக்கிறது இந்தோனேசிய அரசு...........???
ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரிகள், அவுஸ்திரேலிய மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் அதிபர்கள், உறவினர்கள், பல நாடுகளை சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட பொது மக்கள் என சர்வதேச அளவில் அநேகர் இந்தோனேசிய அரசிடம் மரணத் தண்டனையை இரத்து செய்யுமாறு கேட்டப் போதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.
வேதனையின் வலி மனிதத்துவத்தை நேசிக்கும் எல்லோரிடமும் இருக்கும். இனி இந்த பூமியில் இவ்வாறான சோக நிகழ்வொன்று நிகழாமல் இருப்பதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று, தூக்குத்தண்டனை ஒழிக்கப்பட வேண்டும், இன்னொன்று, போதைப் பொருட்களை இல்லாமல் செய்ய வேண்டும். இவற்றை நடைமுறைப் படுத்துமா உலக அரசாங்கங்கள்..........??

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மரண தண்டனைக் கைதிகளினது  மரணத்தை எதிர்கொண்ட வலியையும் மரணத்தை எதிர்கொள்ளப் போகும்  உங்களின் வலியையும் எண்ணிப் பார்க்கிறேன். அதனைப் புரிந்து கொள்ள முடியுமா அல்லது புரிவதுதான் சாத்தியமா என எண்ணும் போது நெஞ்சுக்குள் ஏதோவொன்று புரள்கிறது.

மரணம் எம்மை நெருங்குகிறது என்பதனை நாமே உணருகின்ற தருணங்கள்  எத்துணை  கொடியது  என்பதனைப்  புறவயப்பட்டு  உணர  முடியாது மற்றவர்களின் மரணத்தைப் பார்த்து  அவர்களின்  வலியைப் பார்த்து  எமது  நெஞ்சில் எழும் சோகத்தை, பரிதாபத்தை,  அழுகையாக வெளிப்படுத்த முடியும்.  ஆனால் அந்த மரணம்  அகநிலைப்பட்டு அது எம்மை  அழிக்கப்  போகிறது  என்பதனை  நாமே  உணர்கின்ற  தருணத்தைப்  போல்  அதன்  வலியைப்  போல்  உலகில்  வேறெந்த  வலியும்  இருக்கும் என நான் நினைக்கவில்லை.

உங்களுக்கு விதிக்கப்பட்ட  மரண  தண்டனை  சரி  எனக்கூறித்  தொடரும்   பிரதிவாதங்கள் என் நெஞ்சைப் பிளக்கின்றன. உலகில்  பாரிய  தவறுகளைச்  செய்தவர்களுக்கு  எல்லாம் மரண  தண்டனைதான்  தீர்வு  என்றால்  உலக  சனத் தொகையில்  அரைப்பங்கினருக்கு  மேல்  மரண தண்டனைக்கு உரித்தானவர்களாக இருப்பார்கள்.

மகா  தவறுகளைச்  செய்தவர்கள்  எல்லாம்  இன்று  உலகத்  தலைவர்களாகவும்,  செல்வாக்குள்ள பிரமுகர்களாகவும்,  செல்வந்தர்களாகவும்  சட்டத்தின் பிடியில் அகப்படாமல் உலவுகின்ற  போது  சட்டத்தின்  பிடியில் சிக்க வைக்கப்பட்ட உங்கள்  போன்ற  அப்பாவிகள் மட்டும் தானே மரண தண்டனைகளைத் தழுவுகிறார்கள்.

கடந்த  சில  நாட்களாக  மயூரா  உன்  கூர்மையான  இறுகிய  விழிகளைப்  பார்த்துப்  பார்த்து  என்  இதயம்  அழுகிறதெடா.  நீ செய்த  குற்றம்   சமூக  விரோதக்  குற்றம்  என்பதில்  சந்தேகம் இல்லை.   பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது உன் இளவயது மூளை எடுத்த முடிவில்  சிக்கிவிட்டாய் ஆயினும்  நீ சிறையில் உனது தவறுகளை உணர்ந்து திருந்திக் கழித்தநாட்களில்  நீ வரைந்த ஓவியங்கள்  உலகத்தின்  மனச்சாட்சியை பிழிந்தல்லவா எடுக்கின்றன.

மீண்டும்   திருந்திய மனிதனாக இந்த உலகத்தில் வாழ்வதற்கு உனக்கு உள்ள உரிமையை   மனித தர்மத்தை மதிப்பவர்கள் மறுக்க மாட்டார்கள்.  இந்தப் பாழாய் போன இந்தோனேசிய  அரசு  ஏன் உனக்கும் ஏனைய மரணதண்டனைக் கைதிகளுக்கும் திருந்தி வாழும் சந்தர்ப்பத்தை  வழங்க மறுத்தது?

போதைப்  பொருட்களை உற்பத்தி செய்து  மூட்டைகளாக  அடுக்கி வைத்திருந்து வியாபாரம் செய்பவர்களும்   அதனால்  வரும்  அளவிட  முடியாத  பணங்களை வங்கிகளில்  இட்டு வெள்ளைப் பணமாக்குவதற்கு உதவுபவர்களும்  சுக போகமாக வாழும் போது  நீங்கள் மட்டும் பலிக்கடா ஆக்கப்பட்டது என்ன நியாயம்?

திருந்தி வாழ விரும்பும் உங்களை உங்களின் பெற்றவர்களும்  உறவினர்களும்  உலகமும்  பார்த்திருக்கச்  சுட்டுக் கொன்று என்ன விதமான  நீதியை நிலைநாட்டப் போகிறதாம் இந்தோனேசிய அரசு?

ஒரு தடவை  அல்ல இரண்டு தடவைகள் நான் மரணத்திற்கு மிக அருகாமையில் கிடத்தப் பட்டிருக்கிறேன்.   மரணத்தின்  எல்லை  வரை  சென்று  திரும்பிய அவ்  வேளைகளில்  நான் அடைந்த  அச்சம்  எத்தகையது என்பதைச் சொல்ல முடியாது அல்லது அதைச் சொல்வதற்கு முனையும் வாழ்வை மீளப் பெற்றிருக்கிறேன். ஆனால் நீ? உன்னை நானறிவேன். உன் வலியை நானும் உணர்வேன்.

1986ல் எனது 19ஆவது வயதில் என்னைக் கடத்திச் சென்ற எங்கள் தேச விடுதலை இயக்கத்தின் தளபதி மாத்தையா என் நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து 'உன் இறுதிவிருப்பம் என்ன' என்று கேட்டார்.

கைகள்  பின்புறமாகக்  கட்டப்பட்டு  உள்ளாடைகளுடன் நின்ற  எனக்கு    உன்னைப்  போல் “ ஓவியம்  வரையப்  போகிறேன் ”  என்றோ என் பெற்றோரைப் பார்க்கப் போகிறேன் என்றோ சொல்லுகின்ற அளவுக்குக் கூட  உறுதியிருக்கவில்லை.  விடுதலைக்காகப்  போராடப்  புறப்பட்டது தான் என் தவறு  என  உள் மனதில் நினைத்தவாறு  சுடுவதென்று  தீர்மானித்து விட்டார்கள்,  என் மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது, இனி என்ன?   “ எனக்கு  இறுதி  விருப்பம்  என்று  எதுவும்  இல்லை என் உடலைப் பெற்றோரிடம் ஒப்படையுங்கள்”  என்றேன்.

அந்தக்  கணங்களை  உன்  இறுதிக்  கணங்களோடு  பொருத்திப்  பார்க்கிறேன்.  மயூரா.. வெளிப்புற அழுத்தங்களும் என்னைக் கைது செய்தவர்களின்   மன  மாற்றமும்  என்  மரணத்தை நிறுத்தி  விடுதலையைத்  தந்தன. உனக்கும் ஏனையவர்களுக்கும் அது நடக்கவேயில்லையே.

என் தந்தை இரண்டு நாட்கள் உணவைத் தவிர்த்து தியானத்தில் இருந்ததாக என் அம்மா சொன்னார். என் குடும்பம் எப்படித் துயரத்தில் துவண்டிருந்து  போயிருந்தது  என்பதைப் பிற்பாடு  அவர்கள்  வாய்வழி  சொல்லக்  கேட்டு  இருக்கிறேன்.  ஆனால்  இப்போ  உன்  குடும்பம்  கதறுவதைப்  பார்க்கும் போது மீண்டும் என் இதயம் வலிக்கிறது.

2006ல் 20 வருடங்களின் இன்னு மொருமுறை உணர்ந்த மரண வலி இருக்கிறேதே. என்னைத்  தூக்கிச்  சென்ற  இலங்கைப்  படைப் புலனாய்வாரள்கள்  என்னைக்   கொல்வதென்ற  முடிவுடனேயே  கடத்தினார்கள்.  அக்காலத்தில்   கடத்தப்பட்டவர்கள்  எவருமே  வீடு திரும்பியதில்லை.  அவர்கள்  எனது  இறுதி  விருப்பத்தைக்  கேட்கவில்லை.  ஒரு சந்தர்ப்பத்தில் நானாகவே  சொன்னேன்.  காரணம்,  நான்  1986ல்  கொல்லப்பட்டு  இருந்தால்  என் பெற்றோர்  பிள்ளையை  இழந்திருப்பார்கள்.  சகோதரர்கள்  ஒரு  சகோதரனை  இழந்திருப்பார்கள் . எனது  காதலி  தன்  காதலனை இழந்திருப்பாள். (இப்போ என் மனைவி)  ஆனால்  2006ல் நான்  கொல்லப்பட்டிருந்தால்   உலகமே  அறியாத  இரு  குழந்தைகளும்  தங்கள்  அப்பாவை  இழந்திருக்கும்.  அதனால்  சொன்னேன் : “நான்  எந்தத்  தவறும்  செய்யவில்லை.  அப்படி செய்தேன்  எனக்  கருதி  நீங்கள் என்னைக்  கொன்றால்   ' கொன்ற பின்  என் உடலை  ஆறு  அல்லது குளத்தில்  வீசிக்  காணாமல்  போகச்  செய்து  விடாதீர்கள்.  என்  வீட்டுக்கு  அருகில் கொண்டு சென்று  போட்டு விட்டு  செல்லுங்கள், அத்துடன் நான் தரும் கடிதத்தை நீங்கள் படித்துவிட்டு தபாலில் அனுப்பி விடுங்கள்”.   ஏன் என்று கேட்டார்கள். நான் சொன்னேன்: “ எனது உடலை எடுத்துத் துக்கம் கொண்டாடி அந்தத் துயரையும் அனுபவித்துப் பின்ஒரு சில வருடங்களில் அதில் இருந்து மீண்டு தமது வாழ்விற்கான வழியை  என்  மனைவி  பிள்ளைகள் தேடிக்கொள்வார்கள்.

என் உடல் கிடைக்கா விட்டால்   நான்  வருவேன்  என்ற  எதிர்பார்ப்பில்  காத்திருந்து  தமது  வாழ்வையையும்  அழித்து  விடுவார்கள்.  என்றேன்.  கொலை செய்து பழக்கப்பட்ட புலனாய்வாளர்களாக இருந்த போதும்  சற்று நேரம்  அவர்கள் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்கள்.
அடுத்த  நாள்  அதிகாலை  என்னை  விடுவிக்கக்  கண்ணைக்  கட்டிய  நிலையில்  வாகனத்தில்  ஏற்றிய போதும்  கூட  என்னை  சுட்டுக் கொல்லப்  போகிறார்கள்  என்றே  நினைத்தேன். இறக்கி  விட்ட  போது கண்கட்டை அவிழ்க்கக்  கூடாது என்று  சொன்னார்கள். அப்போது  கூடச்  சுட்டு விடுவார்கள் என்றே நினைத்தேன்.

விடப்பட்ட நேரம் அதிகாலை  4 மணி  இருக்கும்  என  நினைக்கிறேன்  வீடு  சென்று அழைப்பு மணியை அழுத்திய  போது  யார்  என்று  கேட்டார்  என் சகலன்  குரு என்றேன். அவரால்  தன்னையே  நம்ப முடியவில்லை. காரணம் யாவரும் நான் உயிரோடு வருவேன் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர்.   என் மனைவி பிள்ளைகள்,  உறவினர்கள், நண்பர்கள்  என  அனைவரும்  மரண  வீடொன்றில்  எப்படித்  துக்கத்துடன்   கூடியிருப்பார்களோ  அப்படி  இருந்தார்கள்.  உலக  நாடுகளின்  அழுத்தமும்  தமிழ் சிங்கள  ஊடக  சமூகத்தின் போராட்டமும்  கடத்தியவர்களின்  மன  மாற்றமும்  மீண்டும்  ஒரு  முறை  என் உயிரைக் காப்பாற்றின.

மயூரா  உங்களை எவராலும் காப்பாற்ற முடியவில்லையே!
உன்னையும்   உன்னுடன்  பயணிக்கும்  உன்  நண்பர்களையும்  உங்கள்  அனைவரதும்  குடும்பங்களையும்  என்  இறுதிக்  கணங்களோடும்  என்  குடும்பம்  உறவினர்கள்  மற்றும் நண்பர்களோடும்    இணைத்துப்  பார்க்கிறேன். இப்படியொரு மரணம்  எவ்வளவு  கொடுமையானது. காக்க வைத்து காக்க வைத்துக் கொல்வது?

மயூரா நீ வரைந்த ஓவியங்களுடன் உன்னை ஒரு ஓவியக் கண்காட்சியில்  சந்திக்க முடிந்திருந்தால்? தவறுகளில் இருந்து திருந்தி வாழ்வது எப்படி என்று உனது வார்த்தைகளில் இந்த உலகத்துக்குச்  சொல்ல உனக்கும் உன்னுடன் பயணிக்கக் காத்திருக்கும் அனைவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால்?

இது ஒரு அற்புதமான உலகமாக இருக்காதா?

துரதிருஸ்டவசமாக இந்த உலகம் இன்னும் நரகமாகவே இருக்கிறது.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |