கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை இனங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு அமைந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மாற்றிய அரசியல் யாப்பே அவரின் அரசியல் வாழ்விற்கு சாவுமணி அடித்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையா ற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது மாவட்டம் கல்வியில் சிறிதளவு வீழ்ச்சி கண்ட மாவட்டமாகவே திகழ்கின்றது. இதற்கு எமது நாட்டில் இடம்பெற்ற 35 வருட யுத்தமும் ஒரு காரணியாக இருக்கலாம். இந்த யுத்தம் எமது கல்வியில் மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தின் வாழ்வாதாரம், பொருளாதாரம், சொத்து, சொந்தம் எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏறக்குறைய 65 வருடகாலமாக நாம் மாறி மாறி வந்த அரசாங்கங்களினால் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த புறக்கணிப்பின் காரணமாகத்தான் எமது சமூகம் போராட்ட சூழலுக்குள் தள்ளப்பட்டது. ஆரம்பத்தில் சாத்வீக ரீதியில் போரிட்டாலும் அது பலன் கொடுக்காமையால் எமது இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்குள் நுழைத்தது.
இந்த ஆயுதப் போராட்டமும் 2009ஆம் ஆண்டுடன் முடிவுற்றது. இந்த நாட்டின் தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கின்ற பாரிய பொறுப்பு எமது வடக்கு கிழக்கு மக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற ரீதியில் வழங்கப்பட்டது. அது கடந்து வந்த தேர்தல்களில் எமது மக்களால் தெரியப்படுத்தப்பட்டு வரும் உண்மை.
வடக்கினை விட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் ஆர்வம் கொண்ட மக்களாக கடந்த பல தேர்தல்களில் சுட்டிக்காட்டியுள்ளார்கள் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் சரி 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் சரி எமது மக்கள் தங்களது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வழங்கியிருப்பது இதனையே காட்டுகின்றது.
தமிழனை தமிழனாக வாழ வைக்கும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தவிர வேறு எந்தக் கட்சியும் இருக்க முடியாது. தற்போதைய நிலையில் நாம் எமது பிரச்சினை தொடர்பில் உள்நாட்டில் நம்பிக்கை இழந்து சர்வதேசத்தை நாடியிருக்கின்றோம். இந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை இனப்படுகொலை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட இருந்த அறிக்கை தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆறு மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளது. இது எமக்கு வேதனை தரக் கூடிய விடயமாகவே இருக்கின்றது.
இருப்பினும் இது தொடர்பில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் நிரலின்படி குறிப்பிட்ட தினத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கு ஆணையா ளரினால் கிடைக்கப்பெற்ற பதில் கடிதத்தில் இந்த ஒருமுறை மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்படும் இனி சந்தர்ப்பம் கொடுக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எமது இனம் இந்த பிற்போடுதல் தொடர்பில் கவலை கொண்டுள்ளது. நாம் மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அடைகின்றோமோ என்ற கவலை எமது மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ஆனால் ஆணையாளரின் இத்தகைய கருத்தானது எமது மக்களின் கவலையை சற்று போக்கக் கூடிய நம்பிக்கையை கொடுக்கின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இனம் அதனையும் விட கடந்த 10 வருடங்களாக அரச பயங்கரவாதத்தால் ஆட்கொள்ளப்பட்டு பல வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்தோம். யுத்தம் முடிவுற்றதும் தமிழருக்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான நிலையில் தான் பல கைதுகள், கடத்தல்கள், காணாமல்போதல் என்பன இடம்பெற்றன. இவர்களால் கைது செய்யப்பட்ட எமது இளைஞர்கள் இன்னும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றம் எமது இளைஞர்களை விடுவிக்கும் என எதிர்பார்க்கின்றோம். தற்போது வந்துள்ள புதிய அரசாங்கம் எமது இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு மூலம் விடுதலை வழங்க வேண்டும். அன்று மக்கள் விடுதலை முன்னணியில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களை அந்த அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை கொடுத்தது என்றால் ஏன் எமது இளைஞர்களுக்கு அவ்வாறானதொரு விடுதலையை வழங்க முடியாது.
இவ்வாறு எமது மக்களின் அபிலாஷைகள் பல நிறைவேற்றப்பட வேண்டும் அதனை நாம் தற்போதுள்ள அரசாங்கத்திடம் உந்துதல் கொடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே புதிய மாற்றம் பெற்ற அரசாங்கத்தில் எமக்கு தருவதாக கூறிய அமைச்சுப் பதவியை தவிர்த்தோம். ஏனெனில் எமது இலக்கு வேறு எமக்கு தருகின்ற அமைச்சுப் பதவி எம்மைக் கட்டுப்படுத்தும் இந்த அரசு ஏதும் தவறு விடும் பட்சத்தில் அதனை தட்டிக் கேட்க முடியாமல் எமது வாய்கள் இந்த அமைச்சின் மூலம் அடைக்கப்படும் எனவே நாம் இதனை ஏற்காமையால் அரசு அதன் கட்டுப்பாடுகளை எமக்கு திணிக்க முடியாது. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக எந்த அரசாங்கம் செயற்பட்டாலும் அதனை முதலில் தட்டிக் கேட்கும் கட்சி எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தவிர வேறு எந்தக் கட்சியாகவும் இருக்க முடியாது.
தற்போது புதிய அரசாங்கம் எமது மக்களின் காணிகளை மீளக்கையளிப்பதாகவும், கைது செய்யப்பட்ட எமது இளைஞர்களை விடுவிப்பதாகவும் தெரிவித்து அதற்கு முன்னேற்பாடாக சில செயற்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. இது எமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு இதனை நாம் வரவேற்கின்றோம்.
இவ்வாறான இலக்குகள் படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் எமது பாரிய இலக்கான இனப்பிரச்சினை தொடர்பில் எமது காய்நகர்த்தல்கள் செல்லும். எமது நாட்டில் வெள்ளையரின் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து எமது இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் வல்லமை இருந்தும் இங்கு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் புறக்கணிப்பினால் பல்வேறு அழிவுகளை சந்தித்தோம். இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது பல இலட்சம் உறவுகள் காவுகொள்ளப்பட்டன. இப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இத்தனை உறவுகள், உடைமைகள் எம்மை விட்டு பிரிந்திருக்காது.
இப்பிரச்சினை தொடர்பில் பல ஒப்பந்தங்கள் வரையப்பட்டன. வரையப்பட்ட மாத்திரத்திலேயே அவை மீறப்பட்டன கிழித்தும் எறியப்பட்டன. இவ்வாறானதொரு நிலை மீண்டும் எமது மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த மாற்றம் பெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டு இருக்கின்றோம் நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்.
இன்று பலரின் ஆட்டங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன சென்ற ஆட்சியில் மஹிந்தவுக்கு மட்டக்களப்பில் வக்காளத்து வாங்கியவர்களுக்கு எமது மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். எமது மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன பாதிக்கப்பட்டவர்கள் எமது மக்கள் ஆனால் அப்போது இருந்த மீள்குடியேற்றப் பிரதியமைச்சரினால் எமது மக்களுக்கு ஒரு வீடு கூட கட்டிக்கொடுக்கப்படவில்லை. எங்கோ இருக்கின்ற இந்தியா எமது மக்களுக்கு கொடுத்த வீட்டை தாம் வழங்கியதாக பெருமிதம் கொண்டு திரிந்தனர்.
ஆனால் மணலாறு எனப்படும் எமது தமிழ் பிரதேசத்தினை வெலிஓயா என்ற சிங்கள கிராமமாக பிரகடனப்படுத்தி பெரும்பான்மை இன மக்களுக்கு அந்த அமைச்சு 1000 வீடுகளைக் கட்டிக் கொடுத்தி ருக்கின்றது. இவ்வாறே எமது மக்களை ஏமாற்றி வந்தனர். அந்த தஸ்தாவேஜுகளுக்கு எமது மக்கள் கொடுத்த பலாபலனே கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு.
இவ்வாறான நிலையில் தான் கடந்த 10 ஆண்டுகளாக பரிதவித்தோம். இதன் காரணமாகவே எமது நாட்டின் சிறுபான்மை இனங்கள் அனைத்தும் சேர்ந்து அன்றைய அரசை ஓரம் கட்ட நினைத்து அதன் ஆட் சியைப் பறித்தன. மஹிந்த மாற்றிய அரசி யல் யாப்பே அவரின் அரசியல் வாழ்விற்கு சாவுமணி அடித்திருக்கின்றது என்றார்.
0 Comments