Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர்களுக்கும் வைத்திய நிபுணர்களுக்கும் எதிரான அவதூறுப் பிரச்சாரங்களுக்குக் கண்டனம்

நோயாளிகள் பராமரிப்புக்கு உகந்த மன அமைதியான சூழலை பாதிக்கின்ற விதத்தில் வைத்தியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விஷமத்தனமான பிரச்சாரங்கள் தொடர்பாக அவதானமாகவும் சமூகப்பொறுப்புடனும் நடந்து கொள்ளவேண்டுமென  மட்டக்களப்பு விசேட வைத்திய நிபுணர்கள் மன்றம் கேட்டுள்ளது.
மட்டக்களப்பு விசேட வைத்திய நிபுணர்கள் மன்றம் நேற்றைய தினம் (21) சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக வைத்திய நிபுணர்கள் தொடர்பில் வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் மட்டக்களப்பு விசேட வைத்திய நிபுணர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் எஸ்.மதனலாகன் வெளியிடப்பட்டுள்ள அவர்களது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாழைச்சேனை வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஒரு சில ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வெளியான செய்தி குறித்து தங்களின் மேலான கவனத்துக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
நோயாளிகளுக்கு அநீதி இழைக்கப்படும் பட்சத்தில் நியாயத்துக்காக குரல் கொடுக்க மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் எப்போதுமே பின்நின்றதில்லை. இதற்காக வெளிப்படையாகவே நாம் சுகாதாரத்துறை சார் தொழிற்சங்கங்களுடன் முரண்பட்ட வரலாறுகளும் உண்டு.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு, முறைப்பாடுகள் அதிமேதகு ஜனாதிபதி வரை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில், சம்பவத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஊடகங்கள் வெளிக்கொணராதது ஏன் என்ற கேள்வி எழுவது சாதாரணமானதே.
அதேபோல இவ்வளவு காலதாமதமாக ஊடகங்களில் மாத்திரம் காட்டுத்தீ போல் இச்செய்தி பரப்பப்படுவதன் பின்னணி என்ன என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அதிலும் வாழைச்சேனை வைத்தியசாலையிலிருந்து மட்டு வாழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகப்பேற்று வைத்தியநிபுணர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்த நிலையிலும், வாழைச்சேனை வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையிலும் இது இடம்பெற்றிருக்கிறது.
அவ்வாறான நிலையில், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர்களுக்கும் வைத்திய நிபுணர்களுக்கும் அவதூறு மற்றும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில், வறுமை நிலையிலுள்ள சில குடும்பங்களின் வறுமையைத் தமக்கு சாதகமாகப் பயனபடுத்தி, திட்டமிடப்பட்ட விதத்தில் சில விஷமிகளால் ஒட்டுமொத்த வைத்திய சமூகத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் சேறு பூசும் பிரச்சாரமாகவே எம்மால் கருதக்கூடியதாக இருக்கின்றது.
தினமும் எத்தனையோ நோயாளிகளைப் பராமரித்து சுகப்படுத்திவரும் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர்களுக்கும் வைத்திய நிபுணர்களுக்கும் இது மிகுந்த மன உளைச்சலையும் மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகள் பராமரிப்புக்கு உகந்த மன அமைதியான சூழலை பாதிக்கின்ற விதத்தில் வைத்தியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் தொடர்பாக அவதானமாகவும் சமூகப்பொறுப்புடனும் நடந்து கொள்ளவேண்டுமென மிகவும் வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்.
கூறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை ஒன்றை முன்னெடுத்து உண்மையைக் கண்டறிய வேண்டுமெனவும் அதன்படி நோயாளிகளுக்கு உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்டிருந்தால் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் கட்டுப்பட்டவர்கள் எனவும் பகிரங்க அறிவிப்பை விடுக்கின்றோம்.
ஊடகதர்மத்தின் பிரகாரம், நியாயத்தின்படி இந்த அறிக்கையை மேற்படி செய்தி வெளியிடப்பட்ட அனைத்து ஊடகங்களிலும் பிரசுரிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

Dr S Mathanalagan
Secretary
Consultants’ Forum, Teaching Hospital Batticaloa

Post a Comment

0 Comments