Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ்ச் சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்தது முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்திய சம்பந்தன்

கிழக்கு மாகாண சபையின் இரண்டாம் தவணைக்கான ஆட்சியை நிறுவுதல் தொடர்பாக கிழக்கில் மையங்கொண்டு விரிவடைந்திருந்த ‘தாழமுக்க’மானது, ஒருமாத காலமாக நாடு முழுவதிலும் சீரற்ற ‘காலநிலை’யைத் தோற்றுவித்திருந்ததுடன் அடிக்கடி பலரும் அதிர்ச்சியடையும் வகையில் பாதுகாப்பான இடங்களை நோக்கி கட்சி தாவுகின்ற நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.
எனினும் இதன்போது ஏற்பட்ட ‘சுனாமி, சூறாவளிக் குழப்பங்கள் யாவும் தற்போது ஒருவாறு முடிவுக்கு வந்து அரசியல் வானம் சீரடைந்துள்ள இன்றைய நிலையில், கிழக்கில் ஆட்சியமைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினதும், இந்த ஆட்சிக்குப் பலம் சேர்த்து உறுதுணையாக நிற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நேர்மைத்தன்மைகள் குறித்து எனது பார்வையைச் செலுத்துவதே இப்பத்தி எழுதுவதன் நோக்கமாகும்.
ஆரம்பத்தில் இம்மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை இவ்விரு கட்சிகளும் தம்பக்கமுள்ள நியாயவாதங்களின் அடிப்படையில் கோரியிருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் 2012இல் செய்துகொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் நாட்டின் தலைமைத்துவத்திலும், பாராளுமன்றத்திலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து நாட்டில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் தேசிய நிறைவேற்று சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்துள்ள நிலைமையின் பின்னரும் புதிய ஜனாதிபதியும், பிரதமரும் ஏற்கனவே செய்துகொண்ட அந்த ஒப்பந்தத்தினை கௌரவித்து அதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கி அவர்களின் நேர்மையைக் காட்டியிருந்தனர்.
அதனடிப்படையில் முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸினை சேர்ந்த நஸீர் அஹமட் பதவியேற்றுக் கொண்ட பின்னர் ‘தேசிய அரசாங்கம்’ என்ற பெயரில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்  கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியிலுள்ள ததமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் அமைச்சர்களைப் பகிர்ந்து கொள்வது என்கிற விடயம் முன்வைக்கப்பட்டபோது, அவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது ஆதரவை விலக்கிக் கொண்டதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மாற்று முதலமைச்சராக நியமித்து ஆட்சியைத் தொடரவும் முயற்சித்திருந்தனர்.
இச்செயலானது, அவர்களின் சுயநலம் நிறைந்த அரசியல் உள்நோக்கங்களையே பகிரங்கப்படுத்திக் காட்டியது. இவ்வேளையில் முதலமைச்சர் விவகார முறுகலுக்குப் பின் ‘தேசிய அரசாங்கம்’ அமைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் அழைப்புக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஆதரவளிக்க முன்வந்ததுடன் கல்வி, காணி அமைச்சுக்களை உள்ளடக்கிய இரண்டு அமைச்சுப் பதவிகளையும், பிரதித் தவிசாளர் பதவியையும் பெறுவதற்கு இணக்கம் தெரிவித்து ஒப்பந்தமொன்றையும் செய்துகொண்டது.
எனினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடி ஒப்பந்தம் செய்யப்பட்ட இவ்வமைச்சுக்கள் தொடர்பான விடயத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் மாறுபாடு செய்து அவர்களின் நேர்மையீனத்தை வெளிப்படுத்தியதனால் மீண்டும் ஏமாற்றமும், சினமும் கொண்ட தமிழ் மக்களும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் பெரும் சங்கடமானதொரு நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டிருந்தனர்.
ஏற்கனவே முதலமைச்சர் விவகாரத்தில் பல்வேறு நியாயங்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த நேரத்தில், வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், அவசரமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவை நேரில் சந்தித்திருந்தார்.
‘ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பதற்கு நீங்கள் முன்வந்த வரலாறு முஸ்லிம் சமூகத்தின் பதிவில் உள்ளது. இந்த இரண்டரை வருடங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் விரும்புவதைப்போல முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருப்பதற்கும் நீங்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவில் அந்த வரலாறும்
நிலைத்திருக்கும்தானே…?’ என அச்சந்திப்பின்போது அவர் ஆலோசனை கூறியபோது, ‘தம்பி.. நீங்கள் அவ்வாறு எனக்கு ஆலோசனை கூறினால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சம்பந்தன் ஐயா எத்தகைய எதிர்வாதமும் செய்யாது பதிலளித்ததுடன், தாம் வலியுறுத்தி வந்த முதலமைச்சர் விவகாரத்தை அத்துடன் கைவிட்டிருந்த உண்மையையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் விடயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சியிலிருந்தவாறு முதலமைச்சருக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வந்திருந்த நிலையில்தான், முதலமைச்சரின் ‘தேசிய அரசாங்கம்’ அமைக்கும் அழைப்பு முன்வைக்கப்பட்டது.
அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் சமூகத்தின் மனங்களைக் காயப்படுத்த விரும்பாது உடன்பட்டுச் செல்லும் நோக்கில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலியுடன் மாகாண கல்வி, காணி அமைச்சுக்கள் தொடர்பான பேச்சுக்களை நடாத்தி இருதரப்பும் உடன்பட்டு ஒப்பந்தமொன்றையும் செய்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் பொறுப்பினை ஏற்பதற்கு சபையின் எதிர்க்கட்சித் தலைவரான தண்டாயுதபாணிக்கு அனைத்து தகுதியும் தராதரங்களும் மலையளவு இருக்க, கல்வி தொடர்பான செயற்பாடுகளில் எத்தகைய அனுபவங்களோ, அதற்கான தகைமைகளோ அணுவளவும் இல்லாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு மிக அவசரமாக கல்வியமைச்சுப் பொறுப்பினை முதலமைச்சர் நஸீர் அஹமட் வழங்கியதானது மிகவும் கண்டிக்கத்தக்கதும். விசனத்துக்குமுரிய செயற்பாடாக மாறியது.
மேலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் கடுகளவிலும் கணக்கில் கொள்ளாது இவ்விதம் செயற்பட்டமையானது தமிழ் மக்களையும், த.தே.கூட்டமைப்பையும் மேலும் கொந்தளிக்கச் செய்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை நியாயமாகக் காட்டி குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு, முதலமைச்சரைப் பெறும் விடயத்தில் உறுதியாக இருந்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து, முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட இந்த ‘தேசிய அரசாங்கம்’ அமைப்பது தொடர்பில் அமைச்சுக்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினைக் கருத்திற்கொள்ளாது கல்வி அமைச்சை முற்றிலும் தகுதியற்ற ஒருவருக்கு அவசர அவசரமாக வழங்கியதானது, தமிழ்ச் சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்றதொரு செயலாகவே பார்க்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில்தான், முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எண்மர் தமது ஆதரவை விலக்கிக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நேரில் சந்தித்ததுடன், பதவியேற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலமைச்சரையும், அரசாங்கத்தையும் கவிழ்த்து விட்டு, த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் இம்மாகாண ஆட்சியைத் தொடர்வதற்கு முயற்சித்திருந்தது.
உண்மையில், கிழக்கு மாகாண சபையில் சிறுபான்மை மக்களின் கூட்டரசாங்கமொன்றை அமைப்பதற்கு திடசங்கற்பம் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்பு, 2012ல் மு.கா. வுக்கு முதலமைச்சர் பதவியுட்பட அமைச்சுக்களையும் தருவதாக பகிரங்கமாகத் தெரிவித்து தமிழ் – முஸ்லிம் மக்களின் சார்பான கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த வேளையில், அவ்வழைப்பினைப் புறந்தள்ளி விட்டு மத்திய அரசின் பிடிக்குள் இம்மாகாண ஆட்சியைச் சிக்க வைத்த சிறுமை மு.கா.வையே சேரும் என்பது யாவரும் அறிந்த வரலாறாகும்.
இந்த வரலாற்றுப் பதிவு அவ்வாறே இருந்து வரும் நிலையில், மு.கா.வின் முதலமைச்சர் தலைமையிலான 2ம் தவணைக்கான ஆட்சிக் காலத்தில் ‘தேசிய அரசாங்கம்’ என்ற பெயரில் தமது ஆட்சி இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்குடன் த.தே. கூட்டமைப்புக்கு மு.கா. அழைப்பு விடுத்திருப்பதை எந்தவகையிலும் மனச்சாட்சியுள்ள மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனினும், மு.கா.வின் ‘தேசிய அரசு’க்கான அழைப்பைப் புறந்தள்ளும் பட்சத்தில்; குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையுடன் மு.கா. நிறுவியுள்ள இந்த மாகாண அரசு எந்த நேரத்திலும் பதவி கவிழ்க்கப்படக்கூடும் என்கிற அச்ச உணர்வு மு.கா.வுக்கு வாக்களித்த கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மனங்களில் அச்சுறுத்திக்கொண்டே இருக்கும் என்பதாலும், அத்தகைய துர்ப்பாக்கிய நிகழ்வொன்று ஏற்படும் பட்சத்தில் அதற்கும் த.தே. கூட்டமைப்பையே மு.கா. தரப்பினர் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காரணங்காட்டி அரசியல் இலாபமடைவதற்கு முயற்சிப்பார்கள் என்பதனாலுமே இந்த ‘தேசிய அரசாங்கம்’ அமைக்கும் மு.கா. வின் முயற்சியில் அரசியலுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே சீரழிந்து காணப்படும் கல்வித்துறைக்கு முக்கியத்துவமளித்து அத்துறையில் அனுபவமும், தகைமைகளும் கொண்டுள்ள தண்டாயுதபாணி அவர்களை மாகாணத்தின் கல்வியமைச்சராக நியமிப்பதன் மூலம் மு.கா.வின் ‘தேசிய அரசாங்க’த்தில் இணைந்து கொள்வதற்கு த.தே.கூட்டமைப்பு முன்வந்திருந்தது.
ஆயினும் மு.கா.வுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக, கல்வியமைச்சு வழங்கப்படாதபோது மாற்றீடாக வழங்கப்படும் எந்தவொரு அமைச்சினையும் ஏற்றுக் கொண்டு மு.கா.வின் ‘தேசிய அரசாங்கத்திற்கு’ ஆதரவளிக்கக்கூடாது என்ற அழுத்தங்கள் த.தே.கூ. தலைவர் சம்பந்தன் ஐயாவை இறுக்கமாகச் சூழ்ந்திருந்த வேளையில்தான், மு.கா. அரசைக் குறுகிய காலத்தில் கவிழ்க்கும் நப்பாசையுடன் ஐ.ம.சு. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அவரைச் சந்தித்தும், திசை திருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.
முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் சிலர், த.தே. கூட்டமைப்பைப் பற்றியும், அதனுடன் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் இணைந்து சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதைப் பற்றியும் மிக மோசமான இனவாதச் சிந்தனையுடன் விமர்சனக் கருத்துக்களை தொடர்ந்தேச்சையாக வெளியிட்டு வந்துள்ள வரலாற்று நிலையில், இப்போது த.தே. கூட்டமைப்பானது மு.கா.வின் தலைமையிலான கிழக்கு மாகாண அரசாங்கத்திற்கு ஆதரவளித்து எவராலும் அசைக்க முடியாத நிலைமைக்கு அதனை நிலைநிறுத்தி இருப்பதானது, அத்தகையவர்களின் முகங்களில் துணியைப்போடச் செய்துள்ளது.
சமகால அரசியலில், காலத்திற்குக் காலம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு எதுவித இலட்சியமும் இல்லாத, மக்களின் நலன்களையும் கௌரவங்களையும் கருத்திற்கொள்ளாத, வெறும் அறிக்கை அரசியலால் மாத்திரம் அதிகார அந்தஸ்துக்களைப் பெற்று சுகபோகங்களையும், அரச வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதற்கு எத்தனித்து வருகின்ற சராசரி அரசியல் வியாபாரிகளைப் போன்று த.தே. கூட்டமைப்பும் விருப்பங் கொண்டிருந்தால், அவர்களின் காலடிக்கே வலிந்து வந்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தம்மைத் தொடர்ந்தேர்சையாகப் புறக்கணித்து வரும் மு.கா.வின் மாகாண அரசுக்கு அற்ப ஆயுளிலேயே சமாதி கட்டிக் காரியம் சாதித்திருக்க முடியும்.
ஆனால் தன்னைச் சந்திக்க வந்த ஐ.ம.சு. கூட்டமைப்பு உறுப்பினர்களின் நீண்ட ஒப்பாரிகளைக் கேட்ட சம்பந்தன் ஐயா என்ன பதில் சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார் தெரியுமா? ‘நாங்கள் முஸ்லிம் காங்கிரஸின் கௌரவத்தை இங்கு பார்க்கவில்லை. முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களின் கௌரவத்தையே கருத்திற் கொண்டிருக்கிறோம். நாங்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு ஆட்சியை நிறுவுவதாயின் முஸ்லிம் மக்களையும் அரவணைத்த ஆட்சியைத்தான் நிறுவுவோம்.
முஸ்லிம் மக்களின் மனங்களைக் காயப்படுத்தி, அவர்களைத் தள்ளி வைத்து எமது ஆட்சியை ஒரு போதும் நிறுவ மாட்டோம். நாம் அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்து முஸ்லிம் முதலமைச்சரையே ஐந்தாண்டுகளுக்கும் தருகின்றோம் என்றபோது முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற மு.கா. அதற்கு இணங்கவில்லை. ஆனால் இப்போது அவ்வாறானதொரு சந்தர்ப்பம், அதாவது முஸ்லிம் மக்களின் வாக்கு ஆணைகளைப் பெற்ற அரசியல் பிரநிதிகளுடன் இணைந்து இம்மாகாணத்தில் ஒரு சிறுபான்மை மக்களின் அரசாங்கத்தை நிறுவுகின்ற சந்தர்ப்பம் எம்மை நோக்கி வந்துள்ளது. அதனை நாம் புறக்கணித்து முஸ்லிம் மக்களின் அபிலாஷைக்கு எதிரானவர்களாக எம்மை வரலாற்றில் அடையாளப்படுத்த விரும்ப மாட்டோம். நீங்கள் சென்று வரலாம்.’
மு.கா.வின் முதலமைச்சருக்கு காலை வாரிவிட்டுச் சென்றவர்கள், சம்பந்தன் ஐயா கால்மேல் கால்போட்டவாறு கூறிய பதிலைக் கேட்டு முகங்கோணியவர்களாக கவலையுடன் அங்கிருந்து வெளியேறினார்கள். கொள்கைவாத அரசியல் முதிர்ச்சியாளரான சம்பந்தன் ஐயாவிடம் அவர்களும், நாங்களுமாக இன்னும் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. குறிப்பாக மு.கா.வின் ஆதரவாளர்கள் பலரும் தற்போது த.தே. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் புத்திசாதுரியத்தையும், துணிச்சலான தீர்மானங்களையும், கௌரவமான அரசியல் நடவடிக்கைகளையும் வெகுவாகப் பாராட்டி ‘சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவு’ என்று ஊடகங்களில் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருப்பதையும் இப்போது அவதானிக்க முடிகின்றது.
ஒன்று மட்டும் எனக்குச் சந்தோஷத்தையளிக்கின்றது. இனி வருங்காலங்களில் த.தே. கூட்டமைப்புடன் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும்போது, முன்னரைப்போல புலிப்பயங்கரவாதம், வடபுல இனச்சுத்திகரிப்பு, ஆட்கடத்தல்கள், படுகொலைகள் என்றெல்லாம் முஸ்லிம் சமூகத்தை இனவாத உசுப்பேத்தி வாக்கு வங்கியை நிரப்பும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளின் இனவாத விஷமப் பிரச்சாரங்கள் இடம்பெறமாட்டாது என்பதே அதுவாகும்.

Post a Comment

0 Comments