வடக்கு கிழக்கில் காணாமல் போனோரின் உறவுகள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன.
அப்பகுதிகளுக்கு எவராவது புதிதாக ஒரு வெளிநாட்டு பிரதிநிதியோ அல்லது அரசாங்கத் தரப்பிலிருந்து ஒருவரோ சென்றால் அவர்களிடம் தமது கண்ணீரால் எழுதப்பட்ட மகஜரைக் கையளிப்பதுவும், அவர்களும் வழமைபோல உறுதிமொழிகளை வழங்கிவிட்டுச் செல்வதுமாகவே காலம் கடந்து வருகிறது.
யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகியும் இதற்கு ஒரு தீர்வு கிட்டவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் இந்தக் காணாமல்போன தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு தாய்மார்களும் பெண்களும், முதியோரும் நடத்திவரும் உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் பார்ப்பவர் மனங்களை உருக வைப்பதாகவே இருக்கிறது.
அலுக்காமல் சலிக்காமல் கடந்த பல வருடங்களாக உறவுகளைத் தொலைத்த இந்த உறவுகள் நடத்திவரும் உண்மையான போராட்டத்தை இதுவரை எவரும் உளப்பூர்வமாக பார்க்கவில்லை போலுள்ளது. பார்த்திருந்தால் இந்த அபலைகள் இன்னமும் வெய்யிலிலும் மழையிலும் அலைந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
இந்த அவலமான நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது அவசியமாகின்றது. உண்மையில் இவர்கள் தொலைத்து நிற்கும் உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிந்து இவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இப்போது இம்மக்களும் இணைந்து உருவாக்கியுள்ள இப்புதிய அரசாங்கம் இந்த மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வர வேண்டும்.
இவ்விடயத்தில் தமிழ்த் தலைமைகள் இதுவரை காலமும் வாய்மூடி மெளனம் காத்தது போதும், இனியாவது இவர்கள் இவ்விடயத்தில் தமது மக்களுக்காக ஏதாவது செய்ய முன்வர வேண்டும்.
அந்த வகையில் கடந்த கால நெருக்கடி மிக்க ஆட்சியின் போதும் பயமின்றித் துணிந்து நின்று இப்பிரச்சினையை சர்வதேச மயமாக்க இதுவரை காலமும் அதனைத் தக்கவைத்து அம்மக்களின் கண்ணீருக்கு விடை தேடப் பக்கபலமாக நின்ற மனோ கணேசன் போன்ற உண்மையான தமிழ்த் தலைமைகளையும் நாம் பாராட்ட வேண்டும்.
கொழும்பிலும் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அம்மக் களை ஒன்றிணைத்து அன்று அவர் நடத்திய போராட்டங்களுக்கு விடை காணப்படும் காலம் இப்போது உருவாகியுள்ளது. அதனை இனியாவது சகல தமிழ்த் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு வெற்றி கண்டு அம்மக்களது அமைதியற்ற வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் திருமலையில் இயங்கி வந்த கோத்தா தடுப்பு முகாம் பற்றிக் கூறியிருந்தார். அந்த முகாம் இரகசியமாக இயங்கியதாகவும் அங்கு சுமார் முப்பத்தைந்து குடும்பங்களும் ஏழு நூறுபேர் வரையிலானோரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது முழு நாட்டு மக்களுக்குமே பேரதிர்ச்சியாகவே இருந்தது. இந்தத் தகவலை கடற்படையினர் மறுத்துள்ள போதிலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய இப்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தகவலின் பின்னர் காணாமல் போன தமது உறவுகளைத் தேடி அலையும் மக்களது மனங்களில் ஒருவித மாறுபட்ட சலனம் ஏற்பட்டுள்ளது. தமது உறவுகள் இது போன்ற இரகசிய தடுப்பு முகாம்களில் உயிருடன்தான் இருப்பார்கள் எனும் நம்பிக்கையும் இவர்களிடையே பிறந்துள்ளது.
கடந்த பல வருடங்களாக மனதை ஒரு வழிப்படுத்த முடியாது தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களது ஏக்கத்தை சற்றுத் தளர்த்துவதாக இச் செய்தி அமைந்துள்ளது.
இந்த மக்களின் இந்த நம்பிக்கை உண்மையாக வேண்டும். காணாமல் போன உறவுகள் இது போன்ற இரகசிய முகாம்களில் உயிருடன் இருக்க வேண்டும். தமிழ்த் தலைவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து உறவுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையும் வேண்டுகோளும் ஆகும்.
காணாமல் போனதாகக் கூறப்படும் பலர் நாட்டில் இயங்கும் இரகசிய தடுப்பு முகாம்களில் இருக்கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போதே அவர்கள் மத்தியில் முதலமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார். இன்று அரசியல்வாதியாக இருந்தாலும் மிகவும் பொறுப்பான ஒரு பதவியை வகித்த அவரது இக்கூற்றில் நிச்சயம் அர்த்தமிருக்க வேண்டும். இது உறவுகளைத் தொலைத்துவிட்டு அலையும் உறவுகளுக்கு நிச்சயம் ஆறுதலாக அமைந்துள்ளது.
இது அவரது ஊகமோ அல்லது நம்பிக்கையோ அல்லது உறுதியோ தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் அவர் அரசியலுக்காக மக்களை மகிழ்விக்கும் அல்லது தற்காலிகமாக திருப்திப்படுத்தும் பேச்சுக்களை எப்போதுமே பேசியதில்லை.
எனவே, இதனை அவர் பேச்சுடன் நிறுத்திவிடாமல் அது உண்மையா என ஆராய்ந்து செயலிலும் காட்ட வேண்டும். அவர் முதலமைச்சர் என்பதற்கும் அப்பால் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எனும் தகைமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார். அதனால் இவ்விடயத்தில் அவரால் முன்னேறிச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் பரிதவிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளியைக் காண முடியும்.
இதேவேளை வடக்கிலோ அல்லது கிழக்கிலோ எத்தகைய இரகசிய தடுப்பு முகாம்களும் இயங்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தில் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் பின்னர் இராணுவ உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே பிரதமர் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு எந்நேரத்திலும் அத்தகைய இடங்களைச் சென்று பார்வையிடலாம் எனவும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் காணாமல் போனவர்கள் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த காலத்திலிருந்தே அதிக கரிசனை காட்டி வந்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இயங்கும் அமைப்பினால் முன்னர் பல தடவைகள் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் பலவற்றில் இவர் நேரடியாகவே கலந்து தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
எனவே, அவர் இவ்விடயத்தில் நிச்சயமாக தன்னாலானா முயற்சிகளைச் செய்வார். அதனால் இவ்விடயத்தில் அவருடன் இணைந்து தமிழ்த் தலைமைகள் செயற்பட வேண்டும்.
தமது சந்தேகங்களையும், தமக்குக் கிடைக்கும் தகவல்களையும் பிரதமருடன் கலந்துரையாடி அவரூடாக இதனை வென்றெடுத்து உறவுகளுக்காக ஏங்கித் தவிக்கும் உறவுகளுக்கு உதவ வேண்டும்.
0 Comments