ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற 2-வது காலிறுதி போட்டியில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
உலக்கோப்பை அட்டவணைப்படி 2-வது காலிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியும், 3-வது போட்டியில் வெற்றி பெறும் அணியும் மோத வேண்டும். அதன்படி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. சிட்னி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்தியா 6 லீக் போட்டி, ஒரு காலிறுதி என 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. மேலும், எதிர் அணியின் 70 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளது. அதே போல், முதலில் பேட்டிங் செய்தபோது அனைத்து போட்டியிலும் 300 ரன்களை தாண்டியுள்ளது. முதலில் பந்து வீசும்போது எதிரணிகளை 300 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது. ஆகவே, இந்தியா பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் பலம் வாய்ந்து காணப்படுகிறது.
போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றாலும் இந்தியா விளையாடும்போது மைதானத்தில் இந்திய ரசிகர்களே நிறைந்து காணப்படுகிறார்கள். இது இந்தியாவிற்கு கூடுதல் பலமாகும்.
ஆஸ்திரேலியா 6 லீக், ஒரு காலிறுதி என 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக 150 ரன்னில் சுருண்டது. மற்றபடி அந்த அணி சிறப்பாக விளையாடி உள்ளது. அந்த அணியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ளனர்.
ஸ்டார்க் இந்த தொடரின் முழுவதும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆகவே, இந்த அணிக்கு அவர் பெரும் தலைவலியாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் வரும் வியாழக்கிழமை காலையில் 9 மணிக்கு தொடங்கும் போட்டியின் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments