முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை பாதுகாக்கும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருவதோடு நான் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை பிரதமர் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறி பாலடி சில்வா நேற்று சபையில் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 23 இன் கீழ் இரண்டில், எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த விசேட கூற்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதிலையே அவர் மேற்கண்டவாறு விமர்சித்தார். சபையில் 23/2 இல் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் இலங்கை மத்திய வங்கியிலிருந்து 124 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளியேற்றுவதற்கு மத்திய வங்கி ஆளுநரினால் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கான அனுமதியை வழங்கியது யார்? என கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் தனது உரையில் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,
மத்திய வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிணை முறிவுகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப்பிணை முறிவுகள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது. அதற்கான அடிப்படை என்ன? மத்திய வங்கியிலிருந்து அமெரிக்க டொலர் 124 பில்லியன் வெளியே கொண்டுவரப்பட்டதா.
மத்திய வங்கி ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை நம்ப முடியாது. தேர்தலுக்கு நாம் பயப்படவில்லை தயாராகவே இருக்கின்றோம். அத் தேர்தலில் ஐ.தே.கட்சியை தோல்வியடைய செய்வோம் நாம் வெற்றியடைவோம் என்றார்.


0 Comments