கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக சி. தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டமை தமிழ் பேசும் சமூகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என கல்முனை உவெஸ்லியன் பழைய மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் எதிரொலியாக கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது.
இதன் பயனாக இது காலவரையும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சி. தண்டாயுதபாணி கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக பதவி ஏற்றுள்ளமை முழு தமிழ் பேசும் சமூகத்திற்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.
கிழக்கு மாகாணத்தின் கல்வி அதிகாரம் உண்மையில் பெரும்பான்மை சமூகத்தவர்களிடம் மட்டுமே இருந்து வந்தது. கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகத்திற்கு கிடைக்காத ஒரு இறுக்கமான நிலை இருந்து வந்ததை காணலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வகுத்த வியூகத்தின் பலனாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இராஜதந்திரத்தினாலும் தமிழ் பேசும் மகன் ஒருவர் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித் துறையில் நீண்ட கால அனுபவமும் ஆற்றலும் ஆளுமையும் மிக்கவராகவும் பலரினதும் பாராட்டையும் நற்பெயரையும் பெற்று கல்வித் துறையில் உயர் பதவிகள் பலவற்றை வகித்த சி. தண்டாயுதபாணியின் காலத்தில் கிழக்கின் கல்வித்துறை சிறப்புற்று விளங்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் அழிவடைந்த எமது கிழக்கு மாகாணம் சிறப்புற்று விளங்க வேண்டுமாயின் கல்வி ஒன்றே மூலதனம் என்பதை உணர்ந்து யாவரும் சமூக மேம்பாட்டுக்காக உழைக்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியுடன் கைகோர்த்து பயணிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments