Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தென்னாப்பிரிகாவை துரத்தும் துரதிர்ஷடம்! வாய்ப்பு தர மறுத்து விரட்டிய எலியட் கையால் தோல்வி அடைந்த கொடுமை

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் மறுபெயர் துரதிர்ஷ்டம் என்பார்கள். ஒவ்வொரு உலக கோப்பையிலும் வலுவாக அணியாக களம் இறங்குவதும் பிறகு மழை அல்லது பதற்றத்தால் கோட்டை விடுவதும் அந்த அணிக்கு வாடிக்கையாகி விட்டது. முதல்முறையாக பங்கேற்ற 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் பிரச்சினைக்குரிய மழை விதியால் அரைஇறுதியோடு அவர்களின் கனவு கரைந்து போனது. 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம் சமன் (டை) ஆனதால் ரன்-அவுட் அடிப்படையில் வெளியேற்றப்பட்டது. 2007-ம் ஆண்டு அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 'சரண்' அடைந்தது.

இப்படிப்பட்ட நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் 4-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்த டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்று அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 
ஆனால்  ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி களத்தில்... வழக்கம் போல் இறுக்கமான சூழலில் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அம்பேல் ஆகி விட்டார்கள். இந்த தோல்விக்கு தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஏதாவது சுவரில் முட்டி மோதி வேதனையை தணித்துக்கொள்வதே சரியான தீர்வாக இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு பீல்டிங்கில் படுமோசமாக சொதப்பினர். பொதுவாக பீல்டிங்கில் உலகத் தரம் வாய்ந்த அணியாக வர்ணிக்கப்படும் தென்ஆப்பிரிக்கா நேற்றைய அரை இறுதியில் செய்த முக்கியமான தவறுகள் வருமாறு:-

31.3 ஓவர்: நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சனும், கிரான்ட் எலியாட்டும் நிலைத்து நின்று ஆடிய போது, இந்த விக்கெட்டை சீக்கிரம் பிரித்தால் தான் ஆட்டத்தை தங்கள் பக்கம் திரும்ப முடியும் என்ற சூழலில் கிடைத்த ரன்-அவுட் வாய்ப்பை தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் நழுவ விட்டார். அதாவது எலியாட் 'பாயிண்ட்' திசையில் பந்தை தள்ளி விட்ட போத, எதிர்முனையில் நின்ற ஆண்டர்சன் ரன் எடுக்க துரிதமாக முன்னேறினார். ஆனால் எலியாட் வேண்டாம் என்று கூறியதால் ஆண்டர்சன் திரும்பி ஓடினார். அதற்குள் எதிர்முனை ஸ்டம்பு அருகே வந்த டிவில்லியர்ஸ் வசம் பந்து சென்றது. ஆனால் பந்தை பிடிக்காமல் வெறும் கையால் ஸ்டம்பை அடித்தார். அந்த நேரத்தில் ஆண்டர்சன் கிரீஸ் பக்கமே வரவில்லை. ரன்-அவுட் உறுதி என்று நினைத்து மெதுவாக வந்து கொண்டிருந்தார். இதனால் டிவில்லியர்சுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு முறை பெய்ல்ஸ் கீழே விழுந்து விட்டால், அதன் பிறகு உடனடியாக ரன்-அவுட் செய்ய வேண்டும் என்றால் பந்தோடு சேர்த்து ஸ்டம்பையும் பிடுங்க வேண்டும் அப்போது தான் ரன்-அவுட் என்று அர்த்தம். டென்ஷனில் அந்த ஞானம் டிவில்லியர்சின் மனதில் உதிக்கவில்லை. பந்தால் ஸ்டம்பை பிடுங்காமல் அடித்ததால்  ஆண்டர்சன் ரன்-அவுட்டில் இருந்து தப்பித்தார். கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. அப்போது 33 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஆண்டர்சன் அதன் பிறகு  58 ரன்களில் தான் ஆட்டம் இழந்தார்.

40.3 ஓவர்: இறுதி கட்டத்தில் நீயா-நானா என்று உச்சக்கட்ட பரபரப்பு நிலவிய சமயத்தில் தனிநபராக நியூசிலாந்தின் சுமையை தாங்கி பிடித்துக் கொண்டிருந்த எலியாட்டை (67 ரன்) ரன்-அவுட் ஆக்க வாய்ப்பு கிட்டியது. பீல்டர் ரோசவ் துல்லியமாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் எறிய, அவரோ பந்தை பிடிக்காமல் ஸ்டம்பை சாய்த்தார். இதனால் எலியாட் கண்டம் தப்பினார். இந்த ரன்-அவுட்டை மட்டும் டி காக் சரியாக செய்திருந்தால் அடுத்து பிரதான பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்திடம் கிடையாது என்பதால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்க கூடும்.

40.6 ஓவர்: டிவில்லியர்ஸ் எறிந்த பந்து ஸ்டம்பில் பட்டிருந்தால் வெட்டோரி வீழ்ந்திருப்பார்.41.2 ஓவர்: மோர்கல் வீசிய பந்தை எலியாட் (68 ரன்னில்) தூக்கியடித்த போது, பிளிஸ்சிஸ் கேட்ச் செய்ய ஓடி வந்தார். கிட்ட வரும் போது தடுமாறி விழுந்து விட்டார். இன்னொரு திசையில் இருந்து அம்லா ஓடி வந்தும் எந்த பிரயோஜனமும்இல்லை.

41.6 ஓவர்: எலியாட் 75 ரன்களில் ஆடிய போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பு இது. மாற்று பீல்டர் பெஹர்டைன் பிடிக்க முயற்சித்த போது கையில் விழுந்து நழுவியது. அந்த நேரத்தில் டுமினியும் பந்தை பிடிக்க ஓடி வந்ததால் இருவரும் மோதிக்கொண்டது மட்டுமே மிச்சம்.
42.4 ஓவர்: நியூசிலாந்தின் வெற்றிக்கு 3 பந்தில் 6 ரன் தேவையாக இருந்த போது, 4-வது பந்தை எதிர்கொண்ட வெட்டோரி பந்தை அடிக்கவில்லை. அது விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. ஆனாலும் எதிர்முனையில் நின்ற எலியாட் ஒரு ரன்னுக்கு ஓடி வந்தார். மிகச்சுலபமாக செய்ய வேண்டிய இந்த ரன்-அவுட் வாய்ப்பையு-ம் விக்கெட் கீப்பர் டி காக் வீணாக்கினார். அவர் தூக்கி எறிந்த பந்து ஸ்டம்பை விட்டு விலகி போய் விட்டது. இந்த அதிர்ஷ்டத்தின் துணையுடன் எலியாட் 5-வது பந்தை சிக்சராக்கி முடித்து வைத்தார். இத்தனை தடவை வாய்ப்புகளை நழுவ விட்டால் எந்த அணிதான் ஜெயிக்காது.

தென்ஆப்பிரிக்க அணி 38 ஒவர்களில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது தான் தென்ஆப்பிரிக்க அதிரடியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. இதே வேகத்தில் ஆட்டம் சென்றிருந்தால் எப்படியும் அந்த அணி 350 ரன்களை கடந்திருக்கும். ஆனால் மழையால் ஆட்டம் 2 மணிநேரம் பாதிக்கப்பட டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 7 ஓவர் குறைக்கப்பட்டது. இது தென்ஆப்பிரிக்காவின் உத்வேகத்தை சீர்குலைத்து, பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

ஏதாவது ஒரு வழியில் தென்ஆப்பிரிக்காவுக்கு மழையும் வில்லனாக வருவது இது ஒன்றும் புதிதல்ல. 1992-ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் வெற்றியை நோக்கி சென்ற போது, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், மழை பெய்ததால் சர்ச்சைக்குரிய விதிப்படி ஒரு பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். இதனால் தலையில் அடித்துக் கொண்டு வெளியேறினார்கள். 

2003-ம் ஆண்டு உலக கோப்பையில் சொந்த நாட்டில் விளையாடிய போது இலங்கைக்கு எதிரான லீக் சுற்றின் போது மழை குறுக்கிட்டு டக்வொர்த் லீவிஸ் விதி அமலுக்கு வந்தது. ஆனால் விதியை சரியாக கணிக்காமலும், புரிந்து கொள்ளாமலும் ஆடி கடைசியில் இந்த ஆட்டம் டை ஆனதால் தென்ஆப்பிரிக்காவின் சூப்பர் சிக்ஸ் வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.

11-வது உலக கோப்பையில் 84 ரன்கள் குவித்து தென்ஆப்பிரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த 36 வயதான கிரான்ட் எலியாட் நியூசிலாந்து மண்ணின் மைந்தன் கிடையாது. அவர் தென்ஆப்பிரிக்க நாட்டுக்காரர் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் பிறந்த எலியாட், அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். தென்ஆப்பிரிக்க அணித்தேர்வில் இனரீதியிலான இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுவதால் அவருக்கு அந்த அணியில் இடம் மறுக்கப்பட்டது. அவரது திறமையை கண்டு வியந்த நியூசிலாந்து முன்னாள் டெஸ்ட் வீரர் கென் ருதர்போர்டு, தங்கள் நாட்டிற்கு வரும்படி ஆலோசனை வழங்கினார். அதன் படி 2001-ம்ஆண்டு தென்ஆப்பிரிக்காவை காலி செய்து விட்டு நியூசிலாந்துக்கு இடம் பெயந்தார். படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து இன்று ஒரே நாளில் புதிய ஹீரோவாகவும் உருவெடுத்து விட்டார்.

Post a Comment

0 Comments