அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சாளர்களின் திறமையை பெரிதும் புகழ்ந்து பேசினார்.
அயர்லாந்து நிர்ணயித்த 260 ரன்கள் இலக்கை இந்தியா ஷிகர் தவன் சதத்துடன் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 36.5 ஓவர்களில் எடுத்து உலகக்கோப்பையில் 9-வது தொடர் வெற்றி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிளைவ் லாய்ட் சாதனை சமன் ஆகியுள்ளது. கங்குலி சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து பேசிய தோனி, “பயிற்சியாளர்களில் ஒருவர் கூறினார் 5 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம் என்று. இது உண்மையில் அபாரமான தொடக்கம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை இந்திய அணிக்காகச் செய்கின்றனர் என்பதே இதன் பொருள். இந்தியப் பந்துவீச்சுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, சுழற்பந்து வீச்சாளர்களும்தான். பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்த நேரிடும் போதும் அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். ஒரு மகிழ்ச்சிகரமான அணியாக நாங்கள் இருப்பதாகவே கருதுகிறேன்.
4 அல்லது 5 ஓவர்களுக்குப் பிறகு கூட ஸ்பின்னர்களை கொண்டு வர முடிகிறது. இருப்பினும் நான் முதல் 10 ஓவர்களை வேகப்பந்தை வைத்தே வீசி வருகிறேன்.
சுரேஷ் ரெய்னா தன் பங்கைச் சிறப்பாகச் செய்தார். அயர்லாந்து அணியில் நிறைய இடது கை வீரர்கள். இதனால் ரெய்னா பயன்படுவார் என்று நினைத்தேன், அவர் தனது பங்கைச் செவ்வனே செய்தார்.” என்றார்.
விக்கெட் கீப்பிங் நிலையிலிருந்து இந்தி மொழியில் பவுலர்களுக்கு ஆலோசனை வழங்குவது பற்றி கேட்ட போது, “எனக்கு அப்போது என்ன தோன்றுகிறதோ அதனை அவர்களிடம் கூற வேண்டும். பேட்ஸ்மென் கால்நகர்த்தல் எப்படி உள்ளது என்பது பற்றி எனது கணிப்பை ஆலோசனைகளாக பவுலர்களுக்கு வழங்கினேன். இந்தி மொழியில் கூறினால் எதிரணி பேட்ஸ்மென்களுக்குப் புரியாது.
டெஸ்ட் தொடரில் நிறைய முயற்சிகளை செய்த பிறகு ஒருநாள் போட்டிகளில் தீவிரம் காண்பிக்க முடிகிறது. இங்கு 4 மாதங்களாக இருப்பதன் அனுகூலம் இதுவே. இந்தப் போட்டிக்கு முன்னதாகக் கூட வீரர்கள் பயணக் களைப்பில்தான் இருந்தனர். ஆனாலும் அவர்கள் ஆட்டம் மேம்பாடு அடைந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர், 9 உலகக்கோப்பை போட்டிகளை வரிசையாக வெல்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உத்வேகத்தை இன்னும் கொண்டு செல்ல வேண்டும்.” என்றார் தோனி.
0 Comments