Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

90 வயதில் சாதனை படைத்த நம்மவர்

திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பேட் நோயல் செல்லப்பிள்ளை கம்பஹா ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மைதானத்தில் நடந்த நான்கு போட்டி நிகழ்வுகளில் முதல் இடங்களைப் பெற்று தனது 90 வயதில் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 28.02.2015 மற்றும் 01.03.2015 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட முதுநிலை மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 4வது திறந்த முதுநிலை மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2015ல் 85 – 90 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான பல்வேறு போட்டிகளில் இவர் பங்குபற்றியிருந்தார். அதற்கிணங்க 5000 மீற்றர் வேகநடைப்போட்டி, 100 மீற்றர் ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப் போட்டி, மற்றும் ஈட்டி எறிதல் போன்றவற்றிலும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
5.09.1924 ல் பிறந்த இவர் ஓய்வுபெற்ற கணக்காய்வு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவனும் ஆவார். இவர் 1974ம் ஆண்டில் இருந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்து வந்துள்ளார். கடந்த 2014ல் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டிகளிலும் மேற்குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் முதல் இடங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1994ம் ஆண்டில் கனடா நாட்டில் நடந்த போட்டிகளில் குறிபார்த்துச்சுடல் போட்டியில் முதல் இடத்தைப்பெற்று நாட்டிற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார். அத்துடன் மலேசியாவில் நடைபெறவுள்ள முதியோருக்கான போட்டிகளில் பங்குபெற்றவுள்ளதாகவும் 90 வயதிலும் இளைஞனாக இருக்கும் இவர் தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments