முற்றிலும் புதிய வீரர்களுடன் 2015 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை தொடர் வெற்றியுடன் வந்த இந்திய அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.
ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனியிடம், ‘இதுதான் உங்களது கடைசி உலகக்கோப்பையா?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தோனி, “எனக்கு வயது 33தான் ஆகிறது. நான் இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறேன். நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது.
அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு வேண்டுமானால் 2019 உலகக்கோப்பை போட்டிகளில் ஆடுவது பற்றி யோசனைகள் ஏற்படலாம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது.” என்றார்.
அரையிறுதிப் போட்டி பற்றி கூறிய தோனி, “300 ரன்களுக்கும் மேலான இலக்கை துரத்துவது எப்போதும் கடினமே. ஆனாலும் நாங்கள் ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்தினோம் என்றுதான் கூற வேண்டும், ஒரு நேரத்தில் 350 ரன்கள் வரை அவர்கள் செல்லும் நிலை இருந்தது. மேட்சிற்குள் நன்றாக வந்தோம்.
வேகப்பந்து வீச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து வீசியிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பையில் அணியின் ஆட்டம் திருப்தி அளிக்கக் கூடியதாக அமைந்தது. தொடர் தொடங்கும் போது இந்த அணி மீது பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. ஆனால், வீரர்கள் சிறப்பாக எதிர்வினையாற்றினர்.
ஆஸ்திரேலியாவுக்கு லேசாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இன்று நல்ல தொடக்கம் கண்டோம், ஷிகர் தவன் கடைசியில் மென்மையாக அவுட் ஆனார். அந்த நேரத்தில் பெரிய ஷாட்கள் ஆட வேண்டிய தேவையில்லை. ஆனால் பெரிய ஸ்கோர், அழுத்தம் அது போன்ற தவறுகளை இழைக்கச் செய்யும். 300 ரன்களுக்கும் மேலான இலக்கு எப்போதும் நாம் செய்ய விரும்பாததைச் செய்யப் பணிக்கக் கூடியது.
அணியின் கீழ் வரிசை பேட்டிங் இந்தச் சூழ்நிலைகளில் பங்களிப்பு செய்ய முடியாது. நல்ல அணிகள் அனைத்தும் கடைசி வரை பேட்டிங்கை வைத்திருக்கும்.
ரஹானே ஒருவர் இந்தத் தொடரில் நிச்சயம் முன்னேற்றம் அடைந்த ஒரு வீரர் என்று கூற வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என்று அவர் நல்ல மேம்பாடு அடைந்துள்ளார்.
ரசிகர்களுக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன், இந்தியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். கிரிக்கெட் ஆடுவதன் பயன் என்ன? மக்கள் நேரில் வந்து பார்ப்பதுதானே...எங்களுடன் பயணித்த ரசிகர்களுக்கு நன்றி. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்.” என்றார்.
அதன் பிறகு மைக்கேல் கிளார்க், தோனியை ஆரத் தழுவி ஏதோ பேசினார்.
பிறகு பரிசளிப்பு மேடைக்கு வந்த கிளார்க், “கடந்த 4 மாதங்களாக இந்தியா இங்கு செய்த பங்களிப்புக்கு தோனிக்கும் இந்திய அணிக்கும் நன்றி.
தோனியிடம் நீங்கள் கேட்டீர்கள் அடுத்த உலகக்கோப்பையில் ஆடுவாரா என்று, நிச்சயம் அவர் ஆடுவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இன்னமும் அவரிடம் நிறைய கிரிக்கெட் திறன்கள் மீதமுள்ளன.” என்றார் மைக்கேல் கிளார்க்.”
தோனியின் வெற்றிப் பயணம்: 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி, 2008 ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதன் முதலாக வெற்றி, 2011 உலகக்கோப்பை வெற்றி, சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, தற்போது 2015 உலகக்கோப்பை அரையிறுதி, உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 11 வெற்றிகள்...
0 Comments