சில பாடசாலை அதிபர்கள் மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கும் போது பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களை வைத்து பணம் வாங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டின் 15ஆம் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் மூலம் இது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் கூறினார்.
தேசிய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்றை கல்வி அமைச்சர் அண்மையில் மேற்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
"பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது அன்பளிப்புக்களையோ, பணங்களையோ அதிபர்கள் அறவிடுவது சட்டவிரோதமாகும். இது தொடர்பில் அதிபர்களுக்கு எதிராக முறைப்பாடு கிடைப்பின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். பிரபல்யமிக்க பாடாசலைகளின் பழைய மாணவர்களை அல்லது கல்லூரி அபிவிருத்திக் குழு உறுப்பினர்களை பாடசாலைக்குள் உள்வாங்கி அவர்களை விளையாட்டுக் பயிற்றுவிப்பார் அல்லது பாடசாலை நிர்மாணப் பணியாளர்களாக நியமிக்கின்றனர்.
அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும்போது இவர்கள் ஊடகா பெற்றோர்களிடம் அன்பளிப்புக்களும், பணங்களும் அறவிடப்படுகின்றமை தெரியவந்துள்ளது. பாடசாலையின் மாணவர் அனுமதி விடயத்தில் பழைய மாணவர்கள் சம்பந்தப்படுகின்றனர். தமது கல்லூரியில் கற்ற பழைய மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஏதாவது அன்பளிப்பு வழங்கின் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் அது பற்றிய கல்வித் திணைக்களத்திற்கோ அல்லது மாகாண கல்வி அமைச்சிற்கோ தெரியப்படுத்தல் வேண்டும். அப்பொருட்கள் சொத்துக்கள் அரச சொத்துக்கள் பதிவேட்டில் பதியப்படல் வேண்டும். 5-6 ஆயிரம் மாணவர்கள் உள்ள பாடாசலைகளில் இந்தப் பிரச்சினை உள்ளது. இவ்வாறான தகவல்களை சேகரித்து வருகின்றோம்.
மாணவர்களிடமிருந்து ஒரு போதும் பாடசாலைக்காக நேரடியாக அன்பளிப்பை பெற முடியாது. சகல அபிவிருத்திகளும் கல்வியமைச்சுக்கு தெரியப்படுத்தல் வேண்டும். சில பாடசாலைகளின் வருடாந்தம் மில்லியன் ருபா கணக்கில் பணம் அறவிடப்படுகின்றன. ஆகக் குறைந்தது ஒரு மாணவனிடமிருந்து 20,000 அறிவிடுகின்றனர்" என்றார்.


0 Comments