வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாசிவன்தீவு கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ஏழு பேரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானதுடன், ஒருவர் காணாமல் போன சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து இயந்திரப் படகின் மூலம் நாசிவன்தீவு கடலில் குளிப்பதற்கு ஏழு நண்பர்கள் இன்று காலை 11.00 மணியளவில் சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் இவர்களில் இரண்டு பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
ஆபத்தான நிலையில் ஒருவரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றவரை தேடும் பணியில் உறவினர்களும் கடற்தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
நண்பர்களான மாத்தளை, ஏறாவூர், வாழைச்சேனையைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று மதியம் பொழுது போக்கிற்காக நாசிவன்தீவு கடற்கரைக்கு சென்று குளித்துக் கொண்டு இருக்கும் வேளையிலயே இச் சம்பவம் பிற்பகல் 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்தவர் மாத்தளை, துங்கியந்த, ரத்தோட்ட வீதியைச் சேர்ந்த முஹம்மட் றிபாஸ் (வயது – 22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ளவர் வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ.குறுக்கு வீதியைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மது றிமாஸ் (வயது – 21) என்றும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் மரணமடைந்த மாத்தளை, துங்கியந்த பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் றிபாஸ் என்பவரது ஜனாஸா தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 Comments