Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சந்திரிகாவைக்கண்டால் ஓடும் சிரேஷ்ட அமைச்சர்கள்

  1. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்துகொண்ட பொது நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையிலும் முன்னாள் ஜனாதிபதியுடன் உரையாடாமல் ஒதுங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 43ஆவது தேசிய தினத்தையொட்டி கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டிலான  நிகழ்வு இன்றிரவு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டேலில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல் முல்லா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல் முல்லா உரையாற்றிக் கொண்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐந்து நட்சத்திர ஹோட்டேலின் மண்டபத்திற்குள் நுழைந்தார். இதன்போது நிகழ்வின் முன்வரிசையில் காணப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் பின்நோக்கி நகர்ந்ததை இதன்போது அவதானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான மாத்திரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை வரவேற்றதுடன் இறுதி வரை அவருடன் நின்றிருந்தார். இதேவேளை, தனது உரை நிறைவடைந்தவுடன் மண்டபத்திலிருந்து கீழே இறங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல் முல்லா, ஜனாதிபதி சந்திரிக்காவை நிகழ்வில் முக்கிய அம்சமான கேக் வெட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, பி.தயாரட்ன மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா எனப் பலர் கலந்துகொண்டபோதும் எவரும் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் உரையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி, தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோர் ஜனாதிபதி சந்திரிக்காவை சூழ்ந்துகொண்டனர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வருகையினை அடுத்து, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரது பார்வையும் அவரை நோக்கிச் சென்றமை முக்கிய விடயமாகும்.

Post a Comment

0 Comments