தற்போது இந்தியாவின் தமிழ் நாட்டிலே முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் கைது காரணமாக தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்துள்ளார்கள், அதனை ஈழத்தமிழர்களாகிய நாம் அவர்களினது உணர்வுகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளிப்பவர்களாக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றோம் அவர்களினது துயரங்களில் நாமும் பங்கு கொள்கின்றோம் எனும் தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டிலே முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் கைதிக்குப் பின்னர் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக மாரடைப்பினாலும், தீக்குளித்தும் 21 பேர் இறந்திருக்கின்றார்கள். இது போன்றுதான் எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் போதும் எமது மக்களின் வடிவுக்காக பலர் தமிழ்நாட்டிலே தங்களது உயிரை தியாகம் செய்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இவ்வாறானவர்களது உணர்வுகளையும், தியாகங்களையும் மதிப்பவர்களாக ஈழத்தமிழர்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்திய நாட்டின் சட்டசபை நீதிமன்றத்தினால் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது அந்த நாட்டின் சட்டத்துறையுடன் சம்பந்தப்பட்டது, அதற்கான மாற்று வழிகள் சட்டத்தினூடாக எடுக்கப்பட வேண்டியது பற்றி நாம் அறிவோம்.
இருந்தாலும் தமிழ் நாட்டில் இருக்கின்ற மக்களிடையே தற்போதைய சூழ்நிலையில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது இந்த நேரத்தில் அவர்களினது உணர்வுகளுடன் ஈழத்தமிழர்களினது உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் உள்ள தமிழர்களினது பிரச்சினை தீர்க்கப்பட்டு அவர்களுக்காக நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயற்பட்ட ஒருவர் அவருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சம்பவம் அந்த நாட்டின் சட்டம் சார்ந்த விடயம்.
அவ்வாறு இருந்த போதும் அவர் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று உறுதியாக இருந்ததன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஈழத்தமிழர்களாகிய நாம் என்றும் மதிப்பளிக்கின்றவர்களாகவே இருந்து செயற்படுகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments