உலக சிறுவர் தினம் இன்று நாடெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் எம்மை பாதுகாருங்கள் என்கின்ற தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு இன்று மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் திறந்தவெளியில் இடம்பெற்றது.
பல்வேறுபட்ட கிராமங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றிய நிலையில் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்கம் குருக்கள் அவர்களின் நல்லாசியுடன் ஆரம்பமான நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன், பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி கேரத், பிரதேச செயலக கணக்காளர் திரு.சி.புவனேஸ்வரன் மற்றும் பட்டிப்பளை கோட்ட அதிகாரி திரு.ந.தயாசீலன், அதிபர்கள் என பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் அன்பு தற்காலத்தில் பரிமாறப்படாமையினை அடிப்படையாக வைத்துக்கொண்டு இன்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெறுவதாகவும், எல்லா நிகழ்வுகளும் அடைக்கப்பட்ட அரங்கில் நடைபெறுவதனால் எல்லோரும் பார்க்கமுடியாத நிலை உருவாகுவதை தவிர்க்கும் வகையில் திறந்த வெளியில் இடம்பெறுவதாகவும், இப்பிரதேசத்தில் திறமையான மாணவர்கள் உள்ளமையும் அவர்களின் திறமை தற்போது வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் பட்டிப்பளை கோட்டத்தில் 34 மாணவர்கள் சித்திபெற்று வெளிக்காட்டியுள்ளதாகவும் அதிலும் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளான முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம், முனைக்காடு சாரதா வித்தியாலயம் என்பன எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றது என பிரதேச செயலாளர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
மேலும் இன்றைய நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட வலயக்கல்வி பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் அவர்கள் கருத்து கூறுகையில்
இன்றைய சிறுவர்கள் நாட்டின் நாளைய தலைவர்கள் அவர்களை உருவாக்குவதில் சமூகத்தில் அனைவரதும் பங்கு அவசியம். அதற்காக சிறுவர்கள் விரும்புவதை நாம் செய்யவேண்டும். இவை இன்று இடம்பெறாமையினை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் சிறுவருக்கென பல்வேறு வகையான நிறுவனங்கள் உலக அரங்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன எனவும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளில் செலுத்துகின்ற அக்கறை அதிகரிக்கப்பட வேண்டும் அவை நாளை எமது பிரதேசத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் கூறினார்.
சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் விசேட போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச முதியோர் சிறுவர்களின் ஆக்கங்கள் அடங்கிய மகரந்தம் எனும் நூலும் வெளிடப்பட்டது
0 Comments