|
கள்ளக்காதலுக்காக ஒரு சிறுவனை கொடூரமான முறையில் கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபத்தைச் சேர்ந்த சலவை தொழிலாளி முரளி. இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. 2வது மகன் தினேஷ் (3) நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவனது பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். இருப்பினும், அவனை காணவில்லை. இதைத் தொடர்ந்து, வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் முரளி புகார் செய்தார்.
|
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முத்து மண்டபம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, முரளியின் வீட்டிற்கு எதிரில் வசித்து வரும் பெயிண்டர் பிரபு என்பவரின் மனைவி சுமதி, தனது வீட்டை பூட்டிவிட்டு, வெளியே வந்து அமர்ந்திருந்தாராம். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதற்கு சுமதி சரியான பதில் கூறவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது வீட்டை திறக்கச் சொல்லியிருக்கின்றனர். அதற்கும் சுமதி மறுத்திருக்கிறார். இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார், பீரோவையும் உடைத்திருக்கின்றனர். அந்த பீரோவில் சிறுவன் தினேஷ் கை, வாய் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்திருக்கிறான்.
இதையடுத்து பெயிண்டர் பிரபுவின் மனைவியான சுமதியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ''எனக்கும், முரளிக்கும் நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு உள்ளது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இதனை தெரிந்து கொண்ட முரளியின் மனைவி என்னை கண்டித்தார். எனவே, அவளை பழிவாங்க திட்டமிட்டேன். அதன்படி, நேற்று வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தினேஷை எனது வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தேன். பின்னர், அவனது கை மற்றும் வாயை கட்டிவிட்டு, அவனை அடித்து உதைத்தேன். இதனால், பலத்த காயம் அடைந்த அவன் வலிப்பு வந்ததைப் போல் துடித்தான்.
இதையடுத்து, தலையணையால் அவனது முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தேன். யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அவனை பீரோவில் வைத்து பூட்டினேன்'' எனக் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் சுமதியை கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|


0 Comments