இப்போது பெய்துவரும் அதிக மழை காரணமாக இலங்கையில் பல பிரதேசங்களில் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு பாரிய அனர்த்தம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை - கொஸ்லாந்தை - மீரியாபெத்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் லயன் வீடுகள் மற்றும் தோட்ட வீடுகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இப் பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த பிரதேசத்தில் மண் சரிவு இடம்பெற்றுகொண்டிருப்பதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காவற் துறையினரோடு மீட்பு பணியில், படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 300இற்கும் மேற்பட்டோர் மண் சரிவுக்குள் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது அங்கே பெய்து வரும் மழை காரணமாக மீட்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்தில் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்ல, பசறை, ஊவாபரணகம, ஹல்துமுல்ல, ஹப்புத்தளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான, விரைவான செய்திகளை, சூரியனின் செய்திகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
மண் சரிவின் கோரத்தின் பதிவுகள் புகைப்படங்களாக..










0 Comments