|
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில், 400 பேர் காணாமற்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு, இந்த மண்சரிவால் முற்றாக புதையுண்டுள்ளதாகவும் இதில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
|
மீரியபெத்தையில் 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன. 7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும் 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும் 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும் 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும் 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன. இவற்றில் தங்கியிருந்தவர்களும் 68 லயன் குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்களும் என சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அந்தக் குடியிருப்புக்களில் வசித்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்று காலையிலேயே மீரியபெத்த பாடசாலைக்கு சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர் தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
![]() ![]() ![]() |


.jpg)
.jpg)
.jpg)
0 Comments