குருக்கள்மடம் புதைகுழி தொடர்பாக ஆராய்ந்து இம் மாதம் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டார். குருக்கள் மடம் பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிலர் கடத்தி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புதைகுழியை தோண்டுவதற்குரிய நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடாக நகர்வு மனுவொன்றை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருந்தார்.
|
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் றியாழ், இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து இம் மாதம் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் இருபத்தியோராம் பிரிவின் கீழ் இது தொடர்பாக தகவல் தெரிந்த அனைவருக்கும் தங்களுடைய தகவலை நீதிமன்றத்துக்கோ பொலிஸாருக்கோ கொடுப்பதற்கு உரிமை இருக்கிறது. ஆகவே, அத்தகவல் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு அதனடிப்படையில் சரியான முடிவுக்கு வருவதற்கு பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையிலே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதவான் தெரிவித்ததாக, பொறியியலாளர் சிப்லி பாறூக் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
மேலும் வைத்திய நிபுணர்களை அவ்விடத்துக்கு கூட்டி வருவதற்கு முன்னரே புதைகுழிகள் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தி இருக்க வேண்டும். அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளை தோண்டுவதற்கே அவர்களை கூட்டி வந்திருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் வந்ததற்கு பின்னர் புதைகுழிகள் தோண்டப்படாததற்குரிய காரணம் என்ன அது ஏன் தோண்டப்படவில்லை என்ற விடயத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டதாக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
|
0 Comments