தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள சமுட் பிரகர்ன் முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஒரு லட்சம் முதலைகள் வளர்க்கப்பட்டு வருவதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று 65 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் நூற்றக்கணக்கான முதலைகள் நிரம்பியிருந்த ஒரு நீர்ப்பகுதிக்குள் குதித்துள்ளார். சுற்றிலும் பார்வையாளர்கள் இருக்கும்போதே அவர் இவ்வாறு திடீரெனக் குதித்ததில் அனைவரும் செய்வதறியாது அதிர்ந்து நின்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் நீண்ட குச்சிகளைக் கொண்டு முதலைகளைத் தடுக்க முயற்சி செய்தபோதும் அவர்களால் அந்த மூதாட்டியைக் காப்பாற்ற இயலவில்லை. அவரது மரணத்தை இன்றுதான் காவல்துறை உறுதி செய்துள்ளது.
|
சிலகாலமாகவே அவர் மனச் சோர்வுடன் காணப்பட்டார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்றும் அவர் வீட்டில் இல்லாததைக் கண்டு புகார் கொடுக்க முனைந்தபோது 24 மணி நேரம் காத்திருக்கும்படி தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டில் இதே முறையில் அங்கு ஒரு பெண் இறந்துபோனதும் அதன்பின்னர் பத்தாண்டுகள் கழிந்த நிலையில் மற்றொரு தற்கொலை சம்பவம் அங்கு நடந்தது பற்றியும் செய்திகள் தெரிவித்துள்ளன. இதுபோன்று பார்வையாளர்கள் வரும் பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பதுவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பூங்காவின் உரிமையாளரான உதென் யங்ப்ரபகோர்ன் கூடுதல் வேலிகள் போடப்பட்டு நடைபாதைப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பத்திரிகைகளில் வெளிவந்துள்ள புகைப்படங்களிலும் இந்த நீர்ப்பரப்பின் மேலாக செல்லும் நடைபாதைகள் அனைத்தும் மார்பளவு உயரம் கொண்ட தடுப்புகளை உடையதாகவே காணப்பட்டன.
|
0 Comments