மங்கள்யானில் உள்ள திரவ இயந்திர இயக்க சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, நாளை செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் 100 சதவீதம் கால் பதிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளிட்ட மனிதன் வாழ்வதற்கு தேவையான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய மங்கள்யான் செயற்கைக்கோள் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 300 நாள் பயணத்தை மேற்கொண்ட மங்கள்யான் நாளை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் இணைகிறது. இதற்காக மங்கள்யானில் உள்ள 440 நியூட்டன் திரவஇயந்திரம் நாளை இயக்கப்படுகிறது.
|
300 நாட்களுக்கு பிறகு திரவ இயந்திரம் இயக்கப்படுவதால், அது சரியான சக்தியுடன் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள சோதனை முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இஸ்ரோ மையத்தில் இருந்தபடி, விஞ்ஞானிகள் சுமார் 4 வினாடிகள் இயந்திரத்தை இயக்கினர். அப்போது, இஸ்ரோ கணிப்புப்படி திரவ இயந்திரம் சீராக இயங்கியது. இதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நாளை காலை திரவ இயந்திரத்தை 24 நிமிடங்கள் தொடர்ந்து இயக்கி, செயற்கைக்கோளை செவ்வாயின் சுற்றுவட்ட பாதையுடன் இணைக்க உள்ளனர். மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதும் அதன் வேகம் வினாடிக்கு 22.1 கி.மீல் இருந்து 4.4 கி.மீ ஆக குறைக்கப்படும். இது குறித்து இஸ்ரோ நிறுவன தரைக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் பிச்சமணி நமது செய்தியாளரிடம் கூறுகையில்,
மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நாளில் இருந்து பல்வேறு முக்கிய தருணங்களை வெற்றிகரமாக கடந்திருந்தது. இந்நிலையில் மற்றொரு முக்கிய தருணமாக 300 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த திரவஇயந்திரம் 24ம் தேதி வெற்றிகரமாக இயக்க வசதியாக திங்களன்று பிற்பகல் 2.30 மணிக்கு சோதனை அடிப்படையில் சில வினாடிகள் இயக்கப்பட்டது.
இதில் திரவ இயந்திரம் எவ்வித பிரச்னையும் இன்றி சீரான வேகத்தில் இயங்கியது. இது தவிர மங்கள்யான் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக்கருவிகளை நகர்த்தும் சக்கர இயந்திரங்களும் நன்றாக வேலை செய்தது. இதன் மூலம் 24ம் தேதி (நாளை) காலை 7.30 மணிக்கு விஞ்ஞானிகள் குறிப்பிட்டபடி மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையுடன் இணைக்கப்படும் என்றார்.
செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யானை நிலைநிறுத்துவதன் மூலம் மாபெரும் சாதனை படைக்க காத்திருக்கிறது இந்தியா. இச்சாதனையை படைக்கும் முதல் ஆசிய நாடு என்ற பெருமையை பெற உள்ளது. இதற்கு முன், சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகள் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை சந்தித்துள்ளன. மேலும், தனது முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நுழையும் நாடு என்ற சாதனையையும் படைக்க இந்தியா காத்திருக்கிறது.
மேவன் சென்றடைந்தது
கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி அமெரிக்காவின் நாசா அனுப்பிய மேவன் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 மாதமாக, 711 மில்லியன் கி.மீ தூரம் பயணித்து செவ்வாயின் சுற்று வட்டப் பாதைக்கு மேவன் வந்துள்ளது. இந்த மேவன், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
|
0 Comments