தமிழகம் மத்திய அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் கொடுக்கும் அழுத்தமே இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா தீர்க்கமான முடிவை எடுக்க வழிவகுக்கும் என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்ற பொன். செல்வராசா தமது இந்திய சந்திப்புக்கள் பற்றி எடுத்துக் கூறும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து இது தொடர்பில் தெரிவித்ததாவது:–
எமது கூட்டமைப்பின் இந்தியப் பயணம் கணிசமான வெற்றியைக் கண்டுள்ளது. தமிழக அரசு மற்றும் அங்குள்ள ஏனைய கட்சிகள், மக்களின் தொடர்ச்சியான அழுத்தமே இந்திய மத்தியரசின் நிலைப்பாட்டில் இன்னும் பாரிய முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை கூட்டமைப்பு சந்திப்பதற்கான வேண்டுகோளை விடுத்திருக்கின்றோம். விரைவில் அதற்கான அழைப்பு வருமென எதிர்பார்க்கின்றோம். தமிழக அரசு மற்றும் அங்குள்ள ஏனைய கட்சிகள், எதிர்க்கட்சி மற்றும் மக்கள் சார்ந்த இயக்கங்களின் தார்மீகமான ஆதரவு வேண்டப்படும் ஒரு நிலையே எமக்கு இப்பொழுது அவசியமாகிறது. தமிழக அரசு எதிர்காலத்தில் கொடுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களே மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் காத்திரமான முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு சுமார் 60 நிமிடங்கள் தொடர்ந்து இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாரதப் பிரதமரிடம் இலங்கையின் இன்றைய அரசியல் போக்குப் பற்றியும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் ஆதாரபூர்வமாக எடுத்து விளக்கினார். இராணுவப் பிரசன்னம், குடியேற்றங்கள், சம்பூர் மக்களின் அவலங்கள் உட்பட அனைத்து விடயங்களும் எங்கள் தலைவரால் இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
பாரதப் பிரதமர் உன்னிப்பாக கேட்டது மாத்திரமன்றி இடைக்கிடை தனது சந்தேகங்களை வினாவியும் தெரிந்து கொண்டார். இலங்கையில் இடம்பெற்ற, இடம்பெறுகின்ற அத்தனை விடயங்களையும் தான் தெரிந்துவைத்துள்ளேன் எனவும் எம்மிடம் கூறினார்.
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எம்முடனான உரையாடலின் போது தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது. பாரதப் பிரதமரை சந்திப்பதற்கு முன் நாம் வெளியுறவுத் துறைச் செயலாளர், வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரையும் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்தையும் இன்றைய இலங்கை அரசியல் சார்ந்த கெடுபிடிகள் பற்றியும் தமிழ் மக்கள் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்கள், சவால்கள் பற்றியும் எடுத்துக் கூறியிருந்தோம்.
எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட வெளியுறவு செயலாளர், அமை ச்சர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைவரும் எம்மிடம் சகல விடயங்களையும் நீங்கள் பிரதமரிடம் எடுத்துக் கூறுங்கள். அவரே தீர்மானம் எடுக்க வேண்டியவர் என ஆலோசனை கூறினார்கள்.
வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எம்மிடம் ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறினார். நான் இலங்கை ஜனாதிபதியிடம் ஏற்கனவே 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்தைப் பற்றிக் கூறியிருக்கிறேன். இந்திய மத்திய அரசைப் பொறுத்த வரை 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க வேண்டு மென்ற நிலைப்பாட்டிலிருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை. அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள் வோமென அவர் தெரிவித்தார் என செல் வராசா எம்.பி. மேலும் தெரிவித்தார்.
0 Comments