வாலிபர் காதலிக்க மறுத்ததால் விரக்தி அடைந்த பெண் என்ஜினீயர், நடைமேம்பாலத்தில் இருந்து குதித்து விட்டார். படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண் என்ஜினீயர்
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(வயது 23, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இவர், கடந்த 2 ஆண்டுகளாக சென்னை வடபழனியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். திடீரென அந்த வாலிபர், ‘‘நான் உன்னை காதலிக்கவில்லை. நட்புடன்தான் பழகி வந்தேன். நீ எனக்கு காதலி கிடையாது. நாம் நண்பர்களாக இருப்போம்’’ என்று கூறினார்.
நடைமேம்பாலத்தில் இருந்து குதித்தார்
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவிதா, நேற்று இரவு வெளியே சென்று வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். அவர், பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள 25 அடி உயர நடை மேம்பாலத்தின் மேலே ஏறிச்சென்றார்.
திடீரென நடைமேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், உடனடியாக வானங்களை நிறுத்தி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் கவிதாவை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments