Advertisement

Responsive Advertisement

பயங்கர பவுன்சரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மென் கீஸ்வெட்டரின் முகம் பெயர்ந்தது.



இங்கிலாந்து அணியின் 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அதிரடி வீரர் கீஸ்வெட்டர்(வயது 26) 46 சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 26 சர்வதேச 20-20 போட்டியிலும் விளையாடி உள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சாமர்செட் அணிக்கு விளையாடி வரும் கீஸ்வெட்டர், நார்த்தாம்டன் ஷயர் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4 நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். போட்டியில் கீஸ்வெட்டர் 14 ரன்கள் எடுத்திருந்த போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.ஜே.வில்லே என்பவரது பயங்கர பவுன்சரை புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து  எதிர்பார்த்ததை விட அதிக உயரம் எழும்பி ஹெல்மெட்டிற்குள் புகுந்து அவரது மூக்கை உடைத்தது. பந்து பலமாக தாக்கியதில் அவரது வலது கண்ணிற்கு கீழும், மூக்கிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்தம் கொட்ட அவர் பிட்சில் அப்படியே சரிந்தார். இந்த பலத்த அடியில் அவரது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மூக்கிலும் பலத்த அடி. அவரது கண்களை சுற்றியும் அடி பட்டுள்ளது. ஆனால் அவரது கண்ணுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிபட்ட கிரெய்க் கீஸ்வெட்டர், 46 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1054 ரன்களை 30.11 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 107 இவரது அதிகபட்ச ஸ்கோர். ஸ்ட்ரைக் ரேட் வலுவாக 89.93 என்று வைத்துள்ளார். விக்கெட் கீப்பராக 12 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளதோடு, 53 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

இவரைக் காயமடையச் செய்த டி.ஜே.வில்லே அதன் பிறகு பேட்டிங்கில் இறங்கி 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் விளாசினார்.  இங்கிலாந்து அணியின் அடுத்த சிறந்த ஆல்ரவுண்டர் என்று பேசப்பட்டு வரும் டேவிட் வில்லேவுக்கு வயது 24. 

மூக்கு மற்றும் கண்ணை சுற்றிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனக்கு அறுவை சிகிச்சை தேவை என்றும் காயம் அடைந்துள்ள கீஸ்வெட்டர் தனது டூவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது கண்ணில் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments