மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகச்சீரழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் ஆலோசனை குழுக்கள், பொலிஸாருடன் இணைந்து செயற்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் ஆலோசனைக் குழுக்களுக்கான கூட்டமொன்று மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகச் சீரழிவுகளும் குற்றச் செயல்களும் 70 சதவீதம் இடம்பெறுவதாக எனக்கு அறிய முடிகின்றது. இந்த குற்றச் செயல்களையும், சமூகச் சீரழிவுகளையும் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் ஆலோசனைக் குழுக்களும், சிவில் பாதுகாப்புக் குழுக்களும் பொலிஸாருடன் இணைந்து செயற்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான மதுபானசாலைகள் காணப்படுகின்றன. இலங்கையில் அதிகமாக மது பாவிக்கப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டரீதியான மற்றும் சட்ட விரோதமான 600க்கு மேற்பட்ட மதுபானசாலைகள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் உழைக்கும் ஒருவர் அதில் அரைவாசியை இந்த மது பாவனைக்கு செலவழித்தால் அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக எவ்வளவு கஷ்டத்தை எதிர் கொள்ளும் என்று எமக்கு நன்கு தெரியும். இதனால் வீடுகளில் சந்தோசமின்றி அதிகமான பிரச்சினைகள் ஏற்படும்.
சிறுவாகள் மீதான பாலியல் வன்முறைச்சம்பவங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அதில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், அண்மையில் ஐந்து வயது சிறுமியொருவர் பாலியல் துஸ்பிரயோத்திற்கு உள்ளானதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதே போன்று கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் உள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தில்; ஹெரோயின் விற்பனை செய்யும் பத்து பேர் உள்ளனர். அதே போன்று வாழைச்சேனை பிரதேசத்தில் மரம் கடத்தி விற்பனை செய்பவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான குற்றச் செயல்கள் மற்றும் சமூகச் சீரழிவிலிருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
பொலிஸ் ஆலோசனைக் குழுக்குழுக்களின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள், அந்த பிரதேசத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அந்த வகையில் இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருடன் இணைந்து செயற்பட வேண்டும்.
நீங்கள் எதுவாயினும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம், அதே போன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிளுடன் தொடர்பு கொண்டு பேசமுடியும்.
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்த பொலிஸ் ஆலோசனைக் குழுக்கள் சிறந்த பாலமாக செயற்பட வேண்டும் என அவர் கூறினார்
0 Comments