Home » » மட்டக்களப்பு கிரான் பகுதியில் இருந்து சவூதி சென்ற பெண், வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு இலங்கை திரும்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கிரான் பகுதியில் இருந்து சவூதி சென்ற பெண், வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு இலங்கை திரும்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நேற்று நாட்டுக்கு வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சபை வீதி, கோரகல்லிமடு என்ற விலாசத்தில் வசிக்கும் நான்கு பெண் பிள்ளைகளின் தாயான தங்கராசா ஞானம்மா (வயது 41) என்பவரே சவூதியில் இருந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் நாட்டுக்கு வந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த வருடம் 2012.12.19ம் திகதி குடும்ப கஸ்டத்தால், சந்திவெளியைச் சேர்ந்த ஒருவரை அணுகி, கொழும்பில் உள்ள முகவர் நிலையத்தின் ஊடாக தான் வெளிநாட்டுக்கு சென்றதாக தெரிவித்த அப்பெண்,
பணிப்பெண்ணாகச் சென்றதில் இருந்து வீட்டு எஜமான் சம்பளம் தராமல் துன்புறுத்தியதாகவும், சம்பளத்தை தருமாறு கேட்டு கெஞ்சியதால் மூன்று மாதச் சம்பளத்துடன் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை வீட்டு எஜமான் அடித்து படியில் இருந்து தள்ளிவிடும் போது கால் உடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட தங்கராசா ஞானம்மா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உதவியுடன் நாட்டுக்கு திரும்பியதுடன், அவர்களே தன்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே குறித்த பெண்ணின் ஒரு கால் முழுமையாக இயங்க முடியாத நிலையில் தற்பொழுது மற்றைய காலும் செயலிழந்து விட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக வைத்தியசாலைப் பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் வாக்கு மூலத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |