Home » » பிரதேச செயலரின் இடமாற்றத்துக்கு எதிராக செங்கலடி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிரதேச செயலரின் இடமாற்றத்துக்கு எதிராக செங்கலடி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் .உ.உதயசிறிதர் உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று ஏறாவூர் பற்று பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்கள், செங்கலடி வர்த்தக சங்கம், ஆட்டோ சங்கம், மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று கடையடைப்பு, மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, செங்கலடி வர்த்தக சங்கம், கிராம அமைப்புக்கள், ஆட்டோ சங்கம், பிரதேச பொதுமக்கள் ஆகியோர் செங்கலடி பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன்செனவிரத்தினவிற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மகஜரில், மேற்படி எமது ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களை இன்றைய தினம் உடன் அமுழுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு கச்சேரிக்கு இடமாற்றம் செய்வதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையை கண்டித்தும் மேற்படி இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரியும் ஏறாவூர் பற்று பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்கள், செங்கலடி வர்த்தக சங்கம், ஆட்டோ சங்கம், மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்றைய தினம் கடையடைப்பு, மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
அரசியல் வாதி ஒருவரின் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களுக்கு இணங்கி எமது பிரதேசத்தில் உள்ள வறிய ஏழை மக்களுக்காக மக்களுடன் இணைந்து சேவையாற்றிவரும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்களின் இவ் இடமாற்றமானது பொது மக்களுக்கு அரச நிர்வாகத்தின் மீதுள்ள உண்மைத்தன்மையையும், சேவை மனப்பாங்கையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. நிர்வாக முகாமைத்துவத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்திற்கு கொண்டுவந்துள்ள பிரதேச செயலாளரை இரண்டு வருடங்களுக்குள் இடமாற்றம் செய்யவேண்டிய அவசர தேவை ஏன் ஏற்பட்டது? பிரதேச செயலாளர் செய்த தவறு என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல்வாதி ஒருவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு வேண்டிய ஒருவரை பிரதேச செயலாளராக ஆக்கவேண்டும் என்பதற்காக மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த செங்கலடி பிரதேச செயலாளரை பதவி உயர்வு என்று மாயையை காட்டி கச்சேரிக்குள் முடக்குவதை பொதுமக்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.மேற்படி பிரதேச செயலாளரது சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் தேவை என்பதால் அவரது முறையற்ற இந்த இடமாற்றத்தை உடன் இரத்துச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஏழை சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், வறிய மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் மேலதிகமாக பல உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் எமது பிரதேச செயலாளரின் செயற்பாடுகளை அறியாதவர்கள் இல்லை இந் நிலையில் மேற்படி இடமாற்றமானது பல மாணவர்களின் கல்வியையும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிப்பதாகவே உள்ளது இது குறித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும். மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அரச அதிகாரியை அரசியல்வாதி ஒருவரின் தனிப்பட்ட காரணத்திற்காக மாற்றம் செய்யலாம் என்ற இது போன்ற பிழையான முன்னுதாரணங்களே இங்குள்ள பொதுமக்களும், புத்திஜீவிகளும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு காரணமாகவுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்திற்குள் இருக்கும் சில தமிழ் அரசியல் வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாது தங்களது சொந்த இலாபங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு தொடர்ந்தும் இதுபோன்ற மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதனாலேயே அரசாங்கத்தை மக்கள் எதிர்ப்பதற்கு காரணமாகவுள்ளது. எனவே மேற்படி அரசியல் வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஏதிராக தமிழ் மக்களை தூண்டிவிடுகின்ற செயற்பாடுகளையே முன்னேடுத்து வருகின்றனர் இதனை அமைச்சர்கள் புரிந்துகொண்டு பொதுமக்களுக்கு நன்மை தரும் விடயங்களை செய்வதற்கு முன்வரவேண்டும் என மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |