Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம் அரியம் கேட்கும் கேள்வி

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம் மக்களின் நன்மைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பல்வேறான கோரிக்கைகளை முன்வைத்தது. முஸ்லிம் மக்களுக்காக தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இக்கட்சி தமது கருத்துக்களை நவநீதம்பிள்ளையிடம் முன்வைத்திருக்குமானால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாக்களிப்பில் கலந்து கொண்டு எதிராக வாக்களித்திருக்கும். அளுத்கம சம்பவத்தினால் எமது கட்சி வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது என சொல்கின்றது. உண்மையில் இச்சம்பவம் தற்போது நடக்காமல் விட்டிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கும். இக்கட்சி வாக்களிக்காமல் நடுநிலை வகித்தமையால் முஸ்லிம்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை என்ன என்பதை அக்கட்சியிடம் கேட்க விரும்புகின்றேன்.
ஐ.நா விசாரணைக் குழுவை நிராகரித்து பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறியதைத் தொடர்ந்து விசாரணைக் குழு இலங்கைக்கு வரவேண்டும் என 10 வாக்குகளை அளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி கேட்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் . மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்பதற்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என்பதை ஐ.நா விசாரணைக்குழு இலங்கை வரக்கூடாதென்பதற்கு எதிராக வாக்களித்ததனைத் தொடர்ந்து நிரூபணமாகின்றது, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு இலங்கைக்கு வரக்கூடாதென வலியுறுத்தி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் 144 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மலையகக் கட்சிகளும், ஈ.பி.டி.பி, தேசிய காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தன. ஆனால் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விடயங்களை விசாரணை செய்ய வேண்டும் என தைரியமாக வலியுறுத்தியது.
வடகிழக்குப் பிராந்தியத்தில்தான் போரின் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். இதனை விசாரணை செய்வதற்காக வேண்டி எம்மோடு இணைந்து குரல் கொடுக்க யாருமே இல்லை என்பதை இவ்வாக்களிப்புப் புடம்போட்டுக் காட்டுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்க யாருமில்லை என்பதோடு, அழுதாலும் அவளேதான் பிள்ளையைப் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டினை அது எமக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றது.
எமது கட்சி ஒற்றுமையுடனான செயற்பாட்டில் என்றும் உள்ளது. எமது மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் நாங்கள் பத்துப்பேர் ஒற்றுமையுடன் வாக்களித்தோம்.
ஐ.தே.கட்சி, ஜே.வி.பி போன்ற கட்சிகள் சிங்கள மக்களின் வாக்குகளை அதிகப்படியாக நம்பியிருக்கும் கட்சிகளாகும். தமிழ் மக்களினது உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தமிழ் மக்களை நம்பி செயற்படும் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை இப்பிரேரணை மீதான வாக்களிப்பு உலகிற்கு பறைசாற்றியிருக்கின்றது.
வடக்கின் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் வாக்குகளினால் அமைச்சுப் பொறுப்பினை வகிக்கின்ற டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் போன்றோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதும், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பதும் தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும்.
எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ் மக்களின் பிரச்சினைகனை சுட்டிக் காட்டி வருவதோடு, சர்வதேச விசாரணை வேண்டும் என பாராளுமன்றத்தில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பகிரங்கமாக துணிச்சலுடன் வலியுறுத்தி வருகின்றது. எமது நாடு இறைமை உள்ள நாடு என்ற சொல்கின்றார்கள் இவ் இறைமைக்கெதிராக இன்னுமொரு சமூகம் எமது மக்களை அடிமையாக வைத்திருக்க நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார்

Post a Comment

0 Comments