|
யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்த தன்னியக்க கருவி மூலம் இயங்கும் சிறிய வகை விமானம், மொபிட்டல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று விடுதி உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் அந்த விமானத்தை மீட்டுச் சென்றிருந்தனர். இந்த விமானத்தை தமது தேவைக்காக யாழ்.நகர்ப் பகுதியில் பறக்க விட்டதாகவும் அது காணாமற் போயுள்ளதாக தெரிவித்த மொபிடெல் தொலைத்தொடர்பு நிறுவனம் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்தது. இதனை உறுதிப்படுத்திய யாழ்.பொலிஸார் அந்த சிறிய விமானத்தை மீளவும் அவர்களிடமே கையளித்தனர்.
|
இந்த விமானத்தை தமது விளம்பரத் தேவைகளுக்காக அந்த நிறுவனத்தினர் பயன்படுத்தியுள்ளனர் என்று யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றது. இதேபோல யாழ்ப்பாணத்திலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும் போதே அதற்குரிய பற்றரி சார்ஜ் இல்லாமல் அது விடுதியின் மேல் விழுந்துள்ளது அந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியதாகும். இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியையும் அவர்கள் பெற்றிருக்கின்றனர். அதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன் குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
|


0 Comments