Advertisement

Responsive Advertisement

வடக்கு, கிழக்கை குறிவைத்து நாசப்படுத்தும் சிகரெட் கம்பனிகள்! - அதிர்ச்சி தரும் ஒரு ஆய்வு முடிவு

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வொன்று கூறுகின்ற போதும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னைய காலங்களைவிட புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வை நடத்திய அடிக் என்ற மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003 முதல் 2013-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அடிக் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த 10 ஆண்டு காலத்தில் சிகெரட் விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளதையும் அடிக் தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ஏ.சி. ரஹீம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். பொதுவாக இலங்கையில் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சிகரெட் கம்பனிகளின் வியாபார உத்திகள் காரணமாக சிகரெட் பாவனை வீதம் அதிகரித்துள்ளதாகவும் ஏ.சி. ரஹீம் கூறினார்.
'அவர்கள் வடக்கு கிழக்கை பிரதான இலக்காகக் கொள்கிறார்கள், அவர்களுக்கு அங்கே ஒரு புது சந்தை உருவாகியிருப்பதனால் தான் அங்கு இப்போது சிகரெட் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது' என்றார் ரஹீம். வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் சிகரெட் பாவனை வீழ்ச்சியடைவதற்கு சிகரெட் கம்பனிகளின் உத்திகள் பற்றியும் சிகரெட் பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியே காரணம் என்றும் அவர் கூறினார்.
புதிய தகவல்களின்படி, இலங்கையில் புகைத்தல் காரணமாக சராசரியாக ஒரு நாளைக்கு 72 பேர் உயிரிழப்பதாகக் கூறிய ஏ.சி. ரஹீம், நாள் ஒன்றுக்கு சுமார் 24 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக மக்கள் செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டினார். இலங்கையில் அதிகரிக்கும் பொருள்விலைகளுக்கு ஏற்ப சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிப்பதில்லை என்றும் இதனால் அரசாங்கத்திற்கு பெருமளவு வரிவருமானம் இழக்கப்படுவதாகவும் அடிக் நிறுவனம் கூறுகின்றது.
உலகில் புகைத்தல் காரணமாக ஒவ்வொரு 6 செக்கென்டுகளுக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் புகைபொருட்கள் மீதான வரியை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என்று நாடுகளைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments