மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்களின் வாக்கு வங்கி என்பன இலங்கைக்கு இன்று பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என, இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயசேகர தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித உரிமை குற்றச்சாட்டுக்கள், சர்வதேச விசாரணை என இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்திற்கும் பின்னால், இந்த இரண்டு சக்திகள் உள்ளன. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையே இலங்கையின் இந்த பாதிப்புக்கு காண வழியை ஏற்படுத்தியது.
|
அடிப்படைவாதிகள் சிலர் அண்மையில், சிங்கள மற்றும் முஸ்லிம் மோதலை உருவாக்கி கறுப்பு ஜூனை ஏற்படுத்த முயற்சித்தமையானது, இலங்கையை மீண்டும் சர்வதேச ரீதியில் பாரதூரமான ஆபத்துக்குள் தள்ளும் நடவடிக்கையாகும். 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பகை ஏற்பட்டது. அது இலங்கைக்கு இழப்பாக மாறியது. அந்த பாதிப்பின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களின் வாக்கு வாங்கி என்பனவே மனித உரிமை பிரச்சினை, சர்வதேச விசாரணை என அனைத்துக்கும் பின்னால் உள்ளன. உலகம் முழுவதும் 80 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த 80 மில்லியன் மக்களால் இலங்கை இந்தளவு பாரிய சேதம் ஏற்பட்டது என்றால், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்களை கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் இலங்கையிடம் இருந்து விலகி செல்லும் வகையில் செயற்பட்டால், நாட்டின் எதிர்காலம் பெரும் பாதிப்புகளை சந்திக்கும்.
பண்டைய கால வரலாற்றில் இருந்தே இலங்கை தென்னிந்தியாவின் ஆக்கிரமிப்புகளை எதிர்நோக்கியது. அதேபோல் மேற்குலக ஆக்கிரமிப்புக்கும் உள்ளானது. இவை இரண்டும் வரலாற்றில் ஒரே தடவையில் நடைபெறவில்லை. ஆனால், இன்று மேற்குலகில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் ஓரே நேரத்தில் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு முனைகளுடன் மோதுவது சிரமமான காரியம். இரண்டு முனைகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், மூன்றாவது முனையாக இஸ்லாம் சமூகம் மற்றும் அரபு முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டால், அது நாடு மற்றும் மக்களின் அழிவுக்கு வழியை ஏற்படுத்தக் கூடும் எனவும் தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.
|
0 Comments